நெல்லை: பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், காயமடைந்தால் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் காயம் அல்லது உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைகின்றனர். எனவே அவர்களுக்கு காப்பீடு வழங்குவது மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே இதன்படி விபத்தில் மரணமடையும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான செலவினம் ஒரு புதுப்பணித்திட்ட குறித்த செலவினம் ஆகும். இதற்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. என்னென்ன விபத்துகள்?: மாணவர்கள் பள்ளிக்கு வந்துசெல்லும் போது ஏற்படும் விபத்து, கல்விச் சுற்றுலா செல்லும்போது ஏற்படும் விபத்து, என்எஸ்எஸ், என்சிசி, ஜூனியர் ரெட் கிராஸ், பாரத சாரண சாரணிய இயக்கம், சுற்றுச் சூழல் மன்றங்கள் மூலம் நடைபெறும் முகாம் மற்றும் பேரணிகளில் பங்கேற்கும்போது ஏற்படும் விபத்து, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது ஏற்படும் விபத்து, மின்கசிவு, ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து, விஷ ஜந்துகளால் ஏற்படும் விபத்து, மாணவர்கள் விடுமுறை நாட்களில் வெளியே செல்லும்போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து ஆகியவை இதில் அடங்கும்.