சென்னை : ஜெயலலிதா இல்ல அலுவலக உதவியாளர், கார்த்திகேயனிடம், நேற்று விசாரணை கமிஷனில், நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது.
ஜெ., மரணம் குறித்து, நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. விசாரணை கமிஷன், 2016 செப்., 22 முதல், டிச., 5 வரை, சென்னை, போயஸ் கார்டனில் வேலை செய்தவர்கள் விபரங்களை, ஜெ., உதவியாளர் பூங்குன்றனிடம் கேட்டது.
அவர், 31 பேர் பட்டியலை, விசாரணை கமிஷனிடம் வழங்கினார். அவரிடம், ஜன., 9ல், விசாரணை நடந்தது. அடுத்த கட்டமாக, அவர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களை, விசாரிக்கும் பணி துவங்கி உள்ளது.
ஜெ., இல்ல அலுவலகத்தில், உதவியாளராக இருந்த கார்த்திகேயன், நேற்று காலை, 10:30 மணிக்கு, விசாரணை கமிஷனில் ஆஜரானார். அவரிடம், நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது.
ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 2016 செப்., 22ல், போயஸ் கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து, அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர், ஜெ.,வை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை பார்த்ததாகவும், வேறு விஷயங்கள் எதுவும் தெரியாது என்றும் கூறி உள்ளார்.
அத்துடன், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஜெ., மரணம் தொடர்பாக பேட்டி அளித்த, 'வீடியோ' காட்சிகளை வழங்கி, 'அவர்களிடம் விசாரிக்க வேண்டும்' என, அவரது வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால், நீதிபதி ஆறுமுகசாமி கடுப்பாகி, 'யு டியூப் என்ற, சமூக வலைதளத்தில் உள்ள வீடியோக்களை, உங்களிடம் கேட்டோமோ' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு, கார்த்திகேயனின் வழக்கறிஞர், 'உங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, விசாரணை கமிஷன் அனுப்பிய, சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என, பதில் அளித்துள்ளார். அதன்பின், நீதிபதி, அந்த வீடியோ பதிவுகள் அடங்கிய, 'பென் டிரைவை' பெற்றுக் கொண்டார்.
விசாரணைக்கு பின், கார்த்திகேயன் கூறுகையில், ''கமிஷனில் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், பதில் அளித்துள்ளேன்,'' என்றார். அவரது வழக்கறிஞர், ராஜ்குமார் பாண்டியன், நிருபர்களிடம் கூறியதாவது:ஜெ., அலுவலகத்தில் பணிபுரிந்ததால், கார்த்திகேயன், கமிஷன் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது.
நீதிபதி, ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர், நிரஞ்சன் கேட்ட கேள்விகளுக்கு, கார்த்திகேயன், தனக்கு தெரிந்த பதில்களை கூறினார். அத்துடன், 24 வீடியோக்கள் உடைய, 'பென் டிரைவ்'வை சமர்ப்பித்தார். அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதிலுள்ள நபர்களிடம் விசாரிக்கலாம் என, தெரிவித்துள்ளோம்.
ஜெ., சிகிச்சை தொடர்பாக, ஜெ., மரணம் தொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த பேட்டி காட்சிகளை அளித்துள்ளோம். 'யு - டியூபில்' இருந்து பதிவிறக்கம் செய்த, வீடியோக்களை வழங்கி உள்ளோம்.
முன்னாள் அமைச்சர், பொன்னையன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் உட்பட, பலர் முரண்பாடாக தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய, வீடியோவை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவர் பதிலால் குழப்பம்
ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான அங்கீகார படிவத்தில், அரசு மருத்துவர் பாலாஜி, ஜெ.,வின் கைரேகையை பெற்றார். அவர், நேற்று முன்தினம் விசாரணை கமிஷனில் ஆஜரானார்.
அப்போது, 'சுகாதாரத் துறை செயலரின் வாய்மொழி உத்தரவை ஏற்று, ஜெ.,யிடம்
கைரேகை பெற்றேன்' என, அவர் பதில் அளித்ததாக, தகவல் வெளியானது. நேற்று காலை, அவர் மீண்டும் விசாரணை கமிஷனில் ஆஜராகி, தான் அவ்வாறு கூறவில்லை என, விளக்கம் அளித்துள்ளார்.
இது குழப்பத்தை அதிகரித்துள்ளது. ஜெ., கைரேகையைப் பதிவு செய்யும்படி, அவரிடம் சொன்னது யார் என்ற கேள்விக்கு, விடை கிடைக்கவில்லை.
இது குறித்து, பாலாஜி கூறுகையில்,''ஜெயலலிதாவின் கைரேகை பெறும் அதிகாரம், எனக்கு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் கூறியதால், அவரிடம் கைரேகை வாங்கவில்லை. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படியே கைரேகையை வாங்கினேன்,'' என்றார். 'கைரேகை பெறும்படி, உங்களிடம் சொன்னது யார்' என்ற கேள்விக்கு, ''இது தொடர்பாக, விசாரணை கமிஷனில் பதில் அளித்துள்ளேன்,'' என்றார்.
ஜெ., வீட்டில் சமையலராக இருந்த ராஜம்மாள், போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த விசாரணை கமிஷன், 'சம்மன்' அனுப்பி உள்ளது. முன்னாள், எம்.எல்.ஏ., ஜெகதீசன், விசாரணை கமிஷனில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். எனவே, அவரிடம், வரும், 22ல் விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெ., இருப்பது போன்ற, வீடியோ பதிவை ெவளியிட்டார். இது தொடர்பாக, விசாரணை கமிஷன் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டது. அத்துடன், வெற்றிவேலுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அவர் சார்பில், அவரது வழக்கறிஞர் ஆஜராகி, வீடியோ பதிவை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார். அந்த வீடியோ காட்சி, போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தினகரன் சார்பில் வழங்கப்பட்ட, வீடியோ காட்சிகள் அடங்கிய, 'பென் டிரைவ்'வும் கமிஷன் விசாரணையில் உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply