கோல்கட்டா: வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கான, பிரத்யேக மின் மயானத்தை, விரைவில் திறக்க உள்ளதாக, மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள், இறந்த பின், அவற்றுக்கு முறையாக இறுதிச் சடங்குகள் செய்து, மரியாதையுடன் புதைக்கவோ, எரியூட்டவோ வசதி செய்து தரும்படி, அரசிடம் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, செல்லப் பிராணிகளுக்கான, பிரத்யேக மின் மயானத்தை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.மேற்கு வங்க அரசின், விலங்குகள் நலத்துறை மற்றும் கோல்கட்டா மாநகராட்சி இணைந்து, இந்த மின் மயானத்தை உருவாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, மேற்கு வங்க விலங்குகள் நலத்துறை அமைச்சர், ஸ்வபன் தேவ்நாத் கூறியதாவது: செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அவை இறந்தவுடன், அவற்றுக்கு இறுதிச் சடங்கு செய்வதில், நிறைய நடைமுறை சிக்கல்களை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், விலங்குகளுக்கென்றே பிரத்யேகமான மின் மயானத்தை உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. ஹூக்ளி நதி அருகே, 25 - 3௦ லட்சம் ரூபாய் செலவில், இந்த மயானம் உருவாக்கப்படும். இதை பயன்படுத்த, பொதுமக்களிடம் இருந்து, குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.