காவிரி நதி நீரைப் பங்கிடுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், தமிழகத்தின் உரிமை உறுதியாகும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தீர்ப்பை கர்நாடகா ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற, தமிழக அரசின் முக்கிய கோரிக்கை ஏற்கப்படுமா என்பதும், இன்று தெரிய வரும்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி நதி, அங்குள்ள ஹாசன், மாண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலுார், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
காவிரி மற்றும் அதன் கிளை நதிகளால், கேரளா மற்றும் புதுச்சேரியும் பயனடைந்து வருகின்றன.
நீண்ட கால பிரச்னை
காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
இந்த மனுக்களை விசாரிக்க, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 'விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, கர்நாடகாவுக்கு பல உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து வந்தது. ஆனால், இந்த உத்தரவுகளை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்தது.
கடந்த ஆண்டு மார்ச்சில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை, வாரத்தில் மூன்று நாட்கள் விசாரிப்பதாக அறிவித்தது.
அதன்படி, நடந்து வந்த விசாரணைகளுக்குப் பின், கடந்தாண்டு, செப்., 20ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிபதி ஓய்வு
அரசு சாரா அமைப்பு, கடந்தாண்டு டிசம்பரில் தொடர்ந்த வழக்கில், 'நான்கு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துஇருந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், 'இன்று தீர்ப்பு வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி அமிதவ ராய், வரும், மார்ச், 1ல், ஓய்வு பெற உள்ளார்.
இந்த தீர்ப்பில், தமிழகத்தின் உரிமை உறுதியாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முக்கிய கோரிக்கையும் ஏற்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்துள்ள இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை, கர்நாடக அரசு நிறைவேற்றுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு அமைந்துள்ள கர்நாடகாவில், இந்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.
அதனால், தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு முன்வராது என, அங்கு பேச்சு நிலவுகிறது. காவிரி தீர்ப்பு, கர்நாடக அரசியலிலும், சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து