சேலம்: சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில் இயக்கத்தால், ரயில்வே துறைக்கு, தினமும், 90 ஆயிரம் ரூபாய் வரை விரயமாகிறது.
சேலம்
- விருதாச்சலம் பயணிகள் ரயில், காலை, 9:50 மணிக்கு, சேலம், ஜங்ஷனிலிருந்து
புறப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து, மதியம்,
1:30க்கு புறப்பட்டு, மாலை, 4:30 மணிக்கு, சேலம் வந்தடைகிறது. மீண்டும்,
மாலை, 6:30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 9:45 மணிக்கு விருதாச்சலம்
சென்றடைகிறது. சேலத்திலிருந்து, அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி,
வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு,
15 ரூபாய், தலைவாசல், 20 ரூபாய், சின்னசேலம், 25 ரூபாய், விருதாச்சலம், 30
ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே
அதிகாரிகள் கூறியதாவது: சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில், மூன்று
இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கான டீசல் தொகைக்கு, தினமும்,2.10
லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம்
சராசரியாக, 1.20 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால், தினமும்
சராசரியாக, 90 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் சேவையை கருத்தில்கொண்டே, ரயில் இயக்கப்படுகிறது. சேலம் -
விருதாச்சலம், 139 கி.மீ., தூர ரயில் வழித்தடத்தை மின்மயமாக்கினால், டீசல்
செலவால் ஏற்படும் வருவாய் இழப்பு மீதமாகும். மேலும், கூடுதலாகவும், இந்த
வழித்தடத்தில் ரயில்களை இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.