வேலூர்:
ஆம்பூர் அருகே, மாற்றுத்திறனாளிக்கு கடன் வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம்
பெற்ற வங்கி மேலாளரை, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு (வங்கி) போலீசார் கைது
செய்தனர்.
வேலார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்
துருகத்தில், பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக, ஆந்திரா
மாநிலத்தை சேர்ந்த ராமநாதராவ், 52, மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
வங்கியில், ஆம்பூர் அடுத்த பார்ச்சனாபள்ளி கிராமத்தை சேர்ந்த, மாற்றுத்
திறனாளியான பார்த்திபன், 25, கடன் கேட்டு சில மாதங்களுக்கு முன்
விண்ணப்பித்தார். ஆனால், பார்த்திபனுக்கு வங்கி மேலாளர், சரியான
பதிலளிக்காமல், அலைகழித்து வந்தார். பின்னர் லஞ்சமாக, 40 ஆயிரம் ரூபாய்
கொடுத்தால், கடன் வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், லஞ்சம் கொடுக்க
விரும்பாத மாற்றுத்திறானளி பார்த்திபன், இது குறித்து மத்திய ஊழல் தடுப்பு
பிரிவு (வங்கி) அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து நேற்று
முன்தினம் மாலை, சென்னையில் இருந்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு
டி.எஸ்.பி., சோமைய்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்பட ஆறு பேர்
கொண்ட குழுவினர் ஆம்பூர் வங்கிக்கு சென்றனர். முதற்கட்டமாக ஒப்பு கொண்ட,
8,000 ரூபாயை பார்த்திபனிடம் கொடுத்து, மேலாளர் ராமநாதராவிடம் கொடுக்க
செய்தனர். அப்போது பணத்தை வாங்கியபோது, மறைந்திருந்த அதிகாரிகள் கையும்
களவுமாக பிடித்தனர். பின்னர் வங்கி மேலாளர் உள்பட அனைத்து ஊழியர்களிடமும்,
நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், ராமநாதராவ் குடியிருந்த
வீட்டிற்கு, அவரை அழைத்துச் சென்று நேற்று அதிகாலை, 2:30 மணி வரை அவரது
வீட்டில், சோதனை நடத்தினர். அவரை கைது செய்து, சென்னை கொண்டு சென்றனர்.