அவிநாசி:அவிநாசி அருகே புதுப்பாளையத்தில், கிராமிய கலைக்குழுவினரின் ஒயி லாட்ட நிகழ்ச்சி அரங்கேற்றம் நடந்தது.
கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு சார்பில், அவிநாசியை அடுத்த புதுப்பாளையத்தில், கிராமத்தினருக்கு ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதமாக நடந்த இப்பயிற்சியில்,
75 பெண்கள், 50 ஆண்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கனகராஜ் தலைமையிலான குழுவினர், பயிற்சியை அளித்தனர்.
பயிற்சி முடிந்து, அதன் அரங்கேற்ற நிகழ்வு, புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ஆசியுரை வழங்கினார். ராமராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், திருப்பூர் ஜே.எம்.எண்:2 மாஜிஸ்திரேட் பழனி முன்னிலை வகித்தனர். ஊர் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், நான்கு மணி நேரம், நிகழ்ச்சி நடந்தது.
பயிற்சியாளர் கனகராஜ் கூறுகையில், ""அவிநாசி வட்டாரத்தில், இதுவரை, 11 கிராமங்களில் குழுக்கள் அமைத்து, ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி பயிற்சி அளித்து, அரங்கேற்றம் நடந்துள்ளது. புதுப்பாளையத்தில், 12வது குழுவின் அரங்கேற்றமாகும். இந்த கலையை மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.