வேலூர்:
''அ.தி.மு.க., அரசு, தனியார் பஸ் உரிமையாளர்களிடம், 400 கோடி ரூபாய் பேரம்
பேசி, பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது,'' என, தி.மு.க., முதன்மை செயலாளர்
துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து,
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், வேலூரில் நடந்த
பொதுக்கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை
வகித்தார். கூட்டத்தில், துரைமுருகன் பேசியதாவது: அ.தி.மு.க., அரசு,
தனியார் பஸ் உரிமையாளர்களிடம், 400 கோடி ரூபாய் பேரம் பேசி கட்டணத்தை
உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ரவுடிகள் ஒன்று
சேர்ந்து, பிறந்தநாள் கொண்டாடும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.
நகைப்பறிப்பு சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன. தமிழகத்தில் அமைதியும்
இல்லை, வளர்ச்சியும் இல்லை. சட்டசபையில், ஜெயலலிதா படம் திறப்பதற்கு
எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும். அவர்கள், சட்டசபையை சொந்த வீடு
என்று நினைத்து விட்டார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடும் காலம் வரும்.
ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவர்கள், எந்த திட்டத்தையும் கொண்டு
வரவில்லை. அ.தி.மு.க., கட்சிக்குள் அவர்களுக்குள்ளே, அவர்களை கவிழ்க்க
'மங்காத்தா' விளையாடுகின்றனர். தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு
திட்டங்களால்தான், தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. ஏரிகளை
தூர்வாரியதாக, 800 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். பல்கலை பணி
நியமனங்களில், பலர் பணம் கொடுத்துள்ளனர். துணை சபாநாயகர் தம்பிதுரை,
தி.மு.க., அழிந்து விடும் என்றார். அவருக்கு ஒரு பதில் கூறுகிறேன். அண்ணா
விதைத்த தி.மு.க.,வை, மன்னாதி மன்னர்களை மண்ணை கவ்வ வைத்த கழகத்தை,
யாராலும் அசைத்து பார்க்க முடியாது; இவ்வாறு அவர் பேசினார்.