இஸ்லாமாபாத்: பாக்., அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீது நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மையங்களை, அரசு கையகப்படுத்தும் நடவடிக்கை துவங்கி உள்ளது.மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை, தடை செய்யப்பட்ட அமைப்பாக, ஐ.நா., ஏற்கனவே அறிவித்துள்ளது; அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.'ஹபீஸ் சயீதை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா போராடி வருகிறது. இதற்கிடையே, ஹபீஸ் சயீது நடத்தி வரும் அமைப்புகளுக்கு, பாக்., அரசு தடை விதித்துள்ளது.ஜமாத் - உத் - தாவா என்ற அரசு சாரா அமைப்பின் மூலம், கல்வி நிறுவனங்களும், பலாஹி இன்சானியத் பவுண்டேஷன் மூலம், மருத்துவ மையங்களையும், ஹபீஸ் சயீதின், லஷ்கர் - இ - தொய்பா நடத்தி வருகிறது.சயீதின் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவன் நடத்தி வந்த கல்வி மற்றும் மருத்துவ மையங்களை, அரசே கையகப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன. ராவல்பிண்டியில் உள்ள, ஒரு கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவ மையங்கள் கையகப்படுத்தும் பணி துவங்கி உள்ளது; மற்ற பகுதிகளிலும், விரைவில் துவங்க உள்ளது.தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., உயர்நிலைக் குழு, சமீபத்தில், பாகிஸ்தானில் ஆய்வு செய்தது. ஐ.நா., நிதி நடவடிக்கை சிறப்பு குழுவின் கூட்டம், பிரான்சின், பாரிஸ் நகரில், விரைவில் நடக்க உள்ளது.சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வது மற்றும் சர்வதேச பண மோசடி தொடர்பான பட்டியலில், பாகிஸ்தானின் பெயர், 2012 முதல், நான்கு ஆண்டுகள் இருந்தது. அந்த பட்டியலில், பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க வேண்டும் என, இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், அதை தவிர்ப்பதற்காக, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, பாக்., அரசு நடவடிக்கை எடுக்கிறது.