சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன். பிளஸ் 2 வரை படித்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் காதலர் தினமான இன்று(பிப்.,14) அத்தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது சைக்கிளில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைககளுடன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட அவர் சிங்கம்புணரி வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். வழியில் அவரை பெரும்பாலான மக்கள் வரவேற்று உபசரித்து அனுப்பிவைத்தனர். ஒரு சில இளைஞர்கள் அவரிடம் தகராறிலும் ஈடுபட்டனர்.
அவர் கூறியதாவது, நம் முன்னோர்கள் நமது கலாசார பண்பாடுகளை பாதுகாத்து தனிமனித ஒழுக்கத்துடனும், மனக்கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர். ஆனால் இன்று சில ஆணும், பெண்ணும் காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்ந்து கலாசார சீரழிவை எற்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக உள்ளார்கள். உலக காதலர் தினம் என்பது நமது நாட்டின் கலாசார பண்பாடுகளை சீரழிக்கும் தினமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிப்.14 ம் தேதியை நமது பண்பாடு, கலாசார தினமாக அறிவித்து இளைய சமுதாயத்தைதவறான பாதைகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நமக்கு அன்று உயிரை கொடுத்து சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். பணம், பொருள் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது அவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தை அடகு வைப்பதற்கு சமம் என்றார். இவர் ஏற்கனவே மரம் வளர்ப்பது, மழை நீர் சேகரிப்பது, பணம், பொருள் வாங்காமல் வாக்களிப்பது, தூய்மை இயக்கம், மது, புகை எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.