டிடிவி குக்கர் சின்னம் கேட்ட வழக்கில் EPS, OPS தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்

2018-02-13@ 00:34:29

டெல்லி: தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலின்போது பயன்படுத்த குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை பிப்.15ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி நேற்று உத்தரவிட்டார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக அம்மா அணி என்று டிடிவி.தினகரனும் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து எதிரெதிர் அணியாக செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். பின்னர் அதிமுகவின் கட்சி , இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதையடுத்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டையும் மதுசூதனன் தலைமையிலான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிக்கு கடந்தாண்டு இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அதிமுக அம்மா அணியென தனியாக செயல்பட்டு வந்த தினகரன் அணி அந்த பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து நடந்து முடிந்த ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலின் போது சுயேச்சையாக வழங்கப்பட்ட குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தற்போது இடைத்தேர்தலில் போது பயன்படுத்திய குக்கர் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கடந்த மாதம் டிடிவி.தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் குக்கர் சின்னம் தொடர்பாக எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

 இதையடுத்து நீதிபதி உத்தரவில்,” டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!