ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றினோம்

2018-02-13@ 00:30:38

சென்னை: தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மக்களுக்கான நல்ல திட்டங்களை உருவாக்கும் சீரிய சிந்தனை வேண்டும். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும், புயல் வேக செயலாற்றல் வேண்டும். இத்தனை குணங்களுக்கும் சொந்தக்காரராக ஜெயலலிதா விளங்கினார். ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற செய்தி எங்கள் காதுகளை வந்தடைந்த நேரம், எங்கள் உயிர் எங்கள் உடலில் இருந்து கழன்று விழுந்தது போல உணர்ந்தோம்.

என்ன செய்வது என்று அறியாமல், இன்னது செய்ய வேண்டும் என்று புரியாமல் கடல் நடுவே துடுப்பின்றி தத்தளிக்கும் படகு போல அலை மோதினோம். எங்களை நாங்களே தேற்றிக் கொண்டு, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, இந்த ஆட்சியையும், இயக்கத்தையும் மாற்றார் கபளீகரம் செய்து விடாமல் தடுத்து நிறுத்தினோம். அந்த விரக்தியில் ஜெயலலிதாவின் ஆட்சி நீடிக்காது, தொடராது என்று அவர்கள் சொன்ன ஆரூடத்தை தவிடுபொடியாக்கி, அவர்களது கனவு கோட்டைகளை தகர்த்தெறிந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே, இந்த பெருமைக்குரிய சட்டமன்றத்திலே, ஜெயலலிதாவின் ஆட்சியே தொடரும் என்ற புதிய வரலாற்றை நாம் உருவாக்கி இருக்கிறோம் இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!