போர்ட் எலிசபத்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 5வது ஒருநாள் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்ற இந்திய அணிக்கு, எஞ்சியுள்ள போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் அருமையான வாய்ப்பு உருவானது. இந்த நிலையில், ஜோகன்னஸ்பர்கில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றியை ருசித்து பதிலடி கொடுத்தது. ஹாட்ரிக் தோல்வியால் துவண்டிருந்த அந்த அணி, பிங்க் சீருடையின் ராசியால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
அதிரடி வீரர் டி வில்லியர்சின் வருகையும் தென் ஆப்ரிக்காவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்திய அணியின் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் - யஜ்வேந்திர சாஹல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்த தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு, ஜோகன்ன்ஸ்பர்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டேவிட் மில்லர் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா தெம்பாக உள்ளது. மழை காரணமாக ஆட்டம் தடை பட்டதும், பீல்டிங்கில் சற்று மெத்தனமாக செயல்பட்டதுமே ஜோகன்னஸ்பர்கில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கோஹ்லி மிரட்டலான பார்மில் இருந்தாலும், மற்ற வீரர்களும் கணிசமாக ரன் குவிப்பது அவசியம். தொடக்க வீரர் ரோகித், நடுவரிசையில் ரகானே தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இவர்கள் பார்முக்கு திரும்புவது கட்டாயம்.
புவனேஷ்வர், பூம்ரா, ஹர்திக் வேகம், குல்தீப், சாஹல் சுழல் என பந்துவீச்சு வியூகம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஜோகன்னஸ்பர்க் தோல்வியை மறந்து அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடினால், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைக்க தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர். தென் ஆப்ரிக்கா: எய்டன் மார்க்ராம் (கேப்டன்), ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி, ஏபி டி வில்லியர்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மார்னி மார்கெல், மோரிஸ், லுங்கி என்ஜிடி, பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, கேயலைல் ஸோண்டோ, பர்கான் பெகார்டியன், ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்).