குற்றவழக்கில் தண்டனை பெற்று தகுதியிழந்தவர் கட்சியை தொடர்ந்து நடத்த முடியுமா? : பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை

2018-02-13@ 01:06:14

புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாஜவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், “குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தனி கட்சி தொடங்க மற்றும் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளின் பதிவை ரத்து செய்ய முழு அதிகாரம் தேவை. மேலும் மக்கள் பிரதித்துவ சட்ட விதிகளின் படி ஒரு கட்சியை ஆணையம் அங்கீகரிக்க மட்டுமே முடியுமே தவிர அதனை ரத்து செய்ய முடியாது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல் வாதிகள் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமா என்ற வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் அடங்கியுள்ளது. அவ்வாறு தகுதியிழந்த ஒரு நபர் கட்சியை தொடர்ந்து நடத்த முடியுமா?, அல்லது அவர்களால் மீண்டும் வேறோரு புதிய கட்சி ஏதேனும் தொடங்க முடியுமா? இதுபற்றி மத்திய அரசு அடுத்த 2 வாரத்தில் தனது நிலைப்பாடு மற்றும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!