சென்னை: 44 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த தொழிலதிபரை தோழியுடன் கடத்தி லாட்ஜில் அடைத்து ைவத்து சரமாரியாக தாக்கிய வழக்கில் தடா ரஹீமை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சையது முகமது புஹாரி (28). தொழிலதிபரான இவர் மணல் வியாபாரம் செய்து வருகிறார். தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ம் ஆண்டு தென்காசியை சோந்த சாகுல் ஹமீது என்பவரிடம் 44 லட்சம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் வாங்கிய பணத்திற்கு வட்டி கூட தரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், திடீரென்று தலைமறைவாகிய சையது முகமது புஹாரி, திருப்பூரில் வசித்து வந்தார். திருப்பூர் அடுத்த சிவகிரியை சேர்ந்த அகஸ்டின் என்பவருடன் சையத் அகமது புஹாரிக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அப்போது அகஸ்டின், நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தனது காதலி ஜெயலட்சுமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என சையது முகமது புஹாரியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
பின்னர், சையது முகமது புஹாரி, திருப்பூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுந்தர்ராஜ் என்பவர் மூலம் காவலர் பணியிடத்தை பெற்றுவிடலாம் என கூறி, ஜெயலட்சுமியை தனியாக சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் இருவரும் பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினர். இந்த தகவல் 44 லட்சம் பணம் கொடுத்த சாகுல் ஹமீதுக்கு கிடைத்தது. இதையடுத்து சாகுல் ஹமீது சென்னையில் உள்ள தடா ரஹீம் உதவியுடன் சையது முகமது புஹாரியை மணலியில் பிடித்துள்ளார். பின்னர் அவரை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். அதைதொடர்ந்து சையது முகமது புஹாரி தங்கி உள்ள லாட்ஜில் பணத்தை வைத்திருப்பார் என நினைத்து அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது, அங்கு ஜெயலட்சுமி தனியாக இருந்துள்ளார்.
இதையடுத்து ஜெயலட்சுமியையும் அவர்கள் கடத்தி வந்து லாட்ஜில் அடைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பிரவேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் கடந்த டிசம்பர் 27ம் தேதி இரவு லாட்ஜிக்குள் அதிரடியாக புகுந்து சையது முகமது புஹாரி மற்றும் ஜெயலட்சுமியை மீட்டனர். பின்னர் சையது முகமது புஹாரி அளித்த புகாரின் படி, கடத்தி தாக்குதல் நடத்திய தென்காசியை சேர்ந்த சாகுல் ஹமீது (37), சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையத் அலீம் (27), திருநெல்வேலி மேலபாளையத்தை ேசர்ந்த நிஜாமுதீன் (44), ஹீரா (32) ஆகிய நான்கு பேர் மீது கடத்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது ெசய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் படி, இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சென்னை மணலியை சேர்ந்த தடா ரஹீம் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.