மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, உயர்மட்டக்குழுவினர் நேற்று 2ம் கட்டமாக ஆய்வு செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து நடந்து 10 நாட்களுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான உயர்மட்டக்குழு, தீ விபத்து நடந்த பகுதிகளில் கடந்த வாரம் 4 மணிநேரம் ஆய்வு செய்தது. அதனை தொடர்ந்து 2ம் கட்டமாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், இரும்பு கர்டர்கள் மூலம் முட்டு கொடுக்கப்பட்ட பணிகள் மற்றும் காலி செய்யப்பட்ட கடைகளில் உயர்மட்டக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.