பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் வாலிபர் கைது

2018-02-13@ 01:50:44

சென்னை:  பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக வாலிபர் சென்னையில் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சிலர் உளவு பார்த்து தகவல் தெரிவிப்பதாக வந்த தகவலையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான்(28), என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக  வந்த தகவலையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அன்சார் மீரானை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதனை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீரானை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அன்சார் மீரானை இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் முன்னாள் பேராசிரியர் ஒருவரை பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அது குறித்து கேட்டதற்கு போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!