கொலை நகரமாக மாறுகிறதா காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பிரபல ரவுடி கொடூர கொலை

2018-02-13@ 00:30:15

சென்னை: மறைமலை நகர் பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து தலை தனியாக, முண்டம் தனியாக வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேளாண்மை விரிவாக்க மையம், அரசு சிமென்ட் குடோன், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதன் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர், ஒரு பிளாஸ்டிக் கவரை பஸ் நிறுத்தத்துக்குள் வீசிவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்தனர். வீசிய வேகத்தில் பிளாஸ்டிக் கவரில் இருந்து ஒரு மனிததலை ரத்த வெள்ளத்தில் சாலையில் உருண்டு ஓடியதால், பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி குருசாமி, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த தலையை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த தலையை பார்க்கும்போது கொலை செய்து சில மணி நேரமே ஆனது போல் இருந்தது. இதனால், போலீசார் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனிடையே, காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே உள்ள ஒரு முட்புதரில் தலையில்லாத சடலம் கிடப்பதாக பெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரும்புதூர் டிஎஸ்பி சிலம்பரசன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதுகுறித்து பெரும்புதூர் போலீசார், வண்டலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வண்டலூர் போலீசார் அந்த தலையை பெரும்புதூருக்கு கொண்டு சென்று உடலுடன் பொருத்தி பார்த்தனர். அப்போது, உடலுடன் தலை ஒத்துபோனதால், முண்டத்தையும் வண்டலூர் போலீசார் கைப்பற்றி மறைமலைநகருக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், மறைமலை நகர் அடுத்த கோணாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (35) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: காவனூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு, நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து பைக்கில் பாலாஜி புறப்பட்டுள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரத்தில், அதவாது காலை 10 மணிக்கு பாலாஜி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் சென்ற பைக்கை காணவில்லை.

செங்கல்பட்டு, நகர் மன்ற துணை தலைவரும் பிரபல ரவுடியான ரவிபிரகாஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிதான் பாலாஜி. இவர் மீது செங்கல்பட்டு தாலுகா, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் கொலை, ஆள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. பாலாஜி கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டவர். பிரபல ரவுடியாகவும் வலம் வந்தார். கொலை செய்யப்பட்ட பாலாஜிக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மணிமங்கலம், மறைமலைநகர் காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கூலிப்படை ஏவி, கொலை செய்தார்களா? பழிக்குப்பழியாக தீர்த்து கட்டப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.தலை வீசப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி விசாரணை நடத்தினர். மொப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அது சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், கொலையாளிகளை பிடிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலைகள் அதிகரித்து வருவதால், கொலை நகரமாக மாறி வருகிறதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதி பூங்காவாக திகழ போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
பொதுமக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, பெரும்புதூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ளது. இதனால், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகளவில் நடக்கிறது. இந்த தொழிலில் பெரும்பாலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தான் உள்ளனர். இவர்களுக்குள் ஏற்படும் முன்விரோதம் காரணமாக கொலைகள் தொடர்ந்து கொண்டே போகிறது. இந்த கொடூர கொலைகளை பார்க்கும்போது, வெளியே நடமாட அச்சமாக உள்ளது. கொலைகள் சர்வ சாதாரணமாக அரங்கேறுவதற்கு முக்கிய காரணம் போலீசார் ரோந்து செல்லாததே. எனவே, மாவட்ட காவல் துறை நிர்வாகம் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டாளிகளை அச்சுறுத்த தலை வீசப்பட்டதா?
பொதுவாக கொலையாளிகள் அடையாளத்தை மறைக்க தாங்கள் கொலை செய்தவர்களின் உடலை மறைப்பதில் தான் குறியாக இருப்பார்கள். ஆனால், இந்த கொலையாளிகள் சற்று தைரியமாகவே, ரவுடியின் தலையை அவர் வசிக்கும் இடத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளார்கள். பிரபல ரவுடியாக பாலாஜி அந்த பகுதியில் வலம் வந்தார். கொலை செய்தவர் வெறித்தனமாக தலையை அறுத்துள்ளதால் அவரது கூட்டாளிகளை அச்சுறுத்தவே பாலாஜியின் தலை அங்கு வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடரும் அரசியல் கொலைகள்
செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அரசியல் கட்சியின் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர் மன்ற துணைத் தலைவர், ஒன்றியக்குழுத் தலைவர், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என சுமார் 75க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. புறநகர் பகுதி என்பதாலும், ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்துள்ளதாலும், உள்ளாட்சி பதவியின் முன்விரோதம் காரணமாகவும் இந்த பகுதியில் தொடர் கொலைகள் அரங்கேறுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!