டென்னிஸ் களத்தில் மீண்டும் செரீனா...

2018-02-13@ 00:30:22

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், குழந்தை பிறந்து 5 மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக களமிறங்கி முன்னணி வீராங்கனைகளுக்கு சவால் விடுத்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக நார்த் கரோலினா ஆஷ்வில்லியில் நடந்த பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரில், அமெரிக்க அணி வெற்றியை உறுதி செய்துவிட்ட நிலையில் சம்பிரதாயமாக நடந்த இரட்டையர் ஆட்டத்தில் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து செரீனா விளையாடினார்.

ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே அவர் இப்போட்டியில் உற்சாகமாக பங்கேற்றாலும் வீனஸ் - செரீனா ஜோடி 2-6, 3-6 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் லெஸ்லி கெர்கோவ் - டெமி ஷுர்ஸ் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. 36 வயதாகும் செரீனா மகளிர் ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின்போது கணவர் அலெக்சிஸ் ஒஹானியன், மகள் ஒலிம்பியா இருவரும் கேலரியில் இருந்து செரீனாவை உற்சாகப்படுத்தினர். அமெரிக்க அணி 3-1 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. அவசர அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்த பிறகு 6 வார காலம் படுக்கையில் கிடக்க நேரிட்டதாக செரீனா தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!