கோவை: பாரதியார் பல்கலை கழகத்தை தொடர்ந்து பல்வேறு பல்கலை கழகங்களிலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித்துறை சார்பில் துணைவேந்தர், பதிவாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 16ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான சுற்றறிக்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 16 பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், செயலர் சுனில்பாலிவால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பல்கலை கழகங்களில் நிலவும் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான பல்கலை மீது தனிகவனம் எடுத்து பேசப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு விவரம், கல்வி வளர்ச்சி பணி, நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, சஸ்பெண்ட் ஆனவர்கள் விவரம், தணிக்கை தடை நிலுவை, நிர்வாக நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சர் அன்பழகன் கோப்புகள் மீது ஆய்வு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.