சிவகாசி: சிவகாசி நகராட்சி தெய்வானை நகரில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகாசி நகராட்சி 32வது வார்டு பகுதியில் தெய்வானை நகர் உள்ளது. 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அச்சகங்கள், பாலித்தீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேசன் கம்பெனிகளும் இப்பகுதியில் அதிகளவில் இயங்கி வருகின்றன. இங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
சிவகாசி நகராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர் தெய்வானை நகர் கிருதுமால் ஓடை வழியாக மீனம்பட்டி கண்மாயை அடைகிறது. கிருதுமால் ஓடையில் தடுப்புச்சுவர் தரமின்றி கட்டப்பட்டதால் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. தெய்வானை நகர் நுழைவு பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் கிருதுமால் ஓடைக்கு மேலே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு சுவர் முற்றிலும் இடிந்து கிடக்கிறது. இதனால் இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.