காஷ்மீரில் மீண்டும் வீரர்கள் முகாமை தகர்க்க முயற்சி : தீவிரவாதிகள் சதி முறியடிப்பு

2018-02-13@ 01:01:55

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமை தகர்க்க தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி வீரர்களின் உடனடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மீண்டும் தீவிரவாதிகள் ஒரு சதிச் செயலை அரங்கேற்ற முயற்சி செய்தனர். ஸ்ரீநகரில் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனை அருகில் உள்ள சிஆர்பிஎப் முகாமை தகர்க்க நேற்று அதிகாலை தீவிரவாதிகள் முயற்சித்தனர்.

அதிகாலை சுமார் 4.30 மணிக்கு முகாம் அருகே சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்ட சிஆர்பிஎப் வீரர்கள், உடனடியாக அவர்களை எச்சரித்தனர். ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்கத் தொடங்கியதை, அடுத்து உடனடியாக வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 49வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்தார். தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்டிடத்திற்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிக்காத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவரும் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!