பெங்களூரு: பெங்களூரு தென் மண்டல சரகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தியதாக 5 பேரை கைது செய்த போலீசார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்துண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவில் தென் மண்டலத்தில் அரசு அலுவலக வளாகத்தில் இருக்கும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வந்தனர். இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்காக தென்மண்டல போலீசார் தரப்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக பனசங்கரி போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் துமகூருவை சேர்ந்த முகமது இம்ரான் (30), பைசுல்லாகான் (48), ரங்கசாமி (45), சபியுல்லா (30), சென்னராயப்பட்டணாவை சேர்ந்த உதயகுமார் (24)என்றும் தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் துமகூருவில் இருந்து டாடா சுமோ வாகனத்தில் பெங்களூரு வந்து, சந்தன மரம் இருக்கும் அலுவலகம் மற்றும் வீடுகளை நோட்டமிட்டு செல்வார்கள். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு சந்தனமரங்களை வெட்டி, வெளி மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இவர்களின் கைது நடவடிக்கையின் மூலம் குமாரசாமி லே அவுட்டில் 2, பனசங்கரி, பசவனகுடியில் தலா ஒரு வழக்கு, வித்யாரண்யபுராவில் 2 வழக்கிற்கு தீர்வு கிடைத்திருப்பது தெரியவந்தது. சோதனையில் கைதான 5 பேரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 130 கிலோ சந்தனமரக்கட்டை, ஒரு வாகனத்தை முதல் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பனசங்கரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.