கூடலூர்: உதகை வனசரகத்திற்குட்பட்ட சிங்காரா நெல்சன் எஸ்டேட் தனியார் தோட்டத்தில் கடந்த 7ம் தேதி யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் யானை மற்றும் மற்றொரு யானை குட்டியை நெருங்க விடாமல் வனத்துறையினர் மற்றும் அவர்களது வாகனங்களை துரத்தி அடித்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் இரண்டும் குட்டியை விட்டு வேறு பகுதிக்கு
சென்றன. இதனை கண்காணித்த வனத்துறையினர் நேற்று காலை 11 மணி அளவில் இறந்த குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
வனசரகர் காந்தன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இறந்தது ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் யானைக்குட்டி என்றும் இறந்து 5 நாட்களாகி விட்டபடியால், வேறு விலங்குகள் தாக்கியதில் குட்டி யானை உயிரிழந்ததா என்பதை கண்டறிய முடியவில்லை என்றும், இறப்பதற்கு முன் குட்டி யானை நல்ல உடல் நலத்துடன் இருந்திருக்க கூடும் என்று கூறிய வனத்துறையினர் இறந்த யானைக்குட்டியின் உடலை பிற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டு சென்றனர்.