வேலூரில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று லாட்ஜில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

2018-02-13@ 00:29:10

சென்னை: வேலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து சென்னை சிறுமிக்கு லாட்ஜில் பாலியல் தொல்லை கொடுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.  சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார் (44). சென்னை ஆயுதப்படை போலீசாக இருந்தார். இவர், திருட்டு கும்பலுக்கு பைக்கை கொடுத்து உதவியதாக கடந்த 2014ம் ஆண்டு சஸ்பெண்ட் ெசய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் சலவை தொழில் செய்யும் விதவை பெண்ணுடன் செல்வகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளான 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் வேலூருக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் சிறுமியுடன் தங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய செல்வகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதாக கூறி கழிவறைக்கு சென்றார். அப்போது, செல்வகுமாருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து சென்ற சிறுமி அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டார். மேலும் தன்னை வேலூரில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாக கூறி அழுதார்.

இதுகுறித்து கன்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்ற போலீசார் பாத்ரூமில் உள்பக்க தாழ்பாள் போட்டுவிட்டு பாதுகாப்பாக இருந்த சிறுமியை மீட்டனர். அப்போது, செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து செல்வகுமாரின் செல்போன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓட்டலுக்கு அருகே நின்றிருந்த செல்வகுமாரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து வேலூர் ஜேஎம்3 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி நேற்றிரவு சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!