சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (50). இவர் ஜி.ஏ.ரோட்டில் ரெடிமேடு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (46). நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி மற்றும் கவிதா கடைக்கு சென்றுவிட்டார். மாலை 4 மணிக்கு கவிதா வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, 40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி, 5வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வீட்டை பூட்டி கொண்டு சென்றார். பின்னர், நேற்று காலை 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூஜை அறையில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.