பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை உயர்வு

2018-02-12@ 01:56:37

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் காய்கறி வியாபாரத்திற்கு பெயர் பெற்றது, பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட். கீழப்பாவூர் வட்டாரத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், அருணாப்பேரி, குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், சாலைப்புதூர் மற்றும் கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து தேங்காயும் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவர்.

கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி பகுதியில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வந்து குவிந்தது. இதனால் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் 35 வரை தான் விற்பனையாகின. நாளொன்றுக்கு 2 டன் முதல் 5 டன் வரை விற்பனைக்கு வந்ததால் விலையும் உயரவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் மார்க்கெட்டிற்கு தேங்காய் 1 டன்னுக்கு குறைவாக விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக தேங்காய் கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!