சென்னை: இரண்டு ஆண்டுகளாக வாடகை உயர்வை அமல்படுத்தாமல் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் வாடகைதாரர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 451 கோயில்கள் உள்ளன. இதுதவிர 56 புனித மடமும், 57 இணைந்த மடமும், 17 ஜெயின் கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 669 ஏக்கர் விளைநிலமும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 226 ஏக்கர் தரிசு நிலமும், 20 ஆயிரத்து 746 மானாவாரி நிலமும் இருக்கிறது.
இந்த நிலங்கள் குறைந்த விலைக்கு இந்து அறநிலையத்துறையால் குத்தகைக்கு விடப்படுகிறது. இதுதவிர கோயில்களுக்கு சொந்தமான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 33,655 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயில்களுக்கு கூடுதல் வருமானத்தை பெருக்கும் வகையில் கோயில் கட்டிடங்களின் வாடகையை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2016 ஜூலை 1ம் தேதி முதல் புதிய வாடகை உயர்த்தப்பட்டது. அப்போது, சந்தை மதிப்பை வைத்து பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக வாடகைதாரர்களுக்கு எந்தவித அறிவிப்பும் தரவில்லை. ஆனால், வாடகையை ஒவ்வொரு மாதமும் கோயில் அலுவலகத்தில் வாடகைதாரர்கள் செலுத்தி வந்துள்ளனர். அவ்வாறு செலுத்தப்படும் வாடகைகளுக்கு முறையாக அதிகாரிகள் ரசீதும் வழங்கவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக கடந்த 2016ல் புதிய வாடகையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகையை பாக்கியாக தர வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக கூறப்படுகிறது. அதாவது, லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாகவும், அந்த தொகையை விரைந்து செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், பாக்கி செலுத்தாத வாடகை தாரர்களை மிரட்டி வெளியேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வாடகைதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘மாதம்தோறும் வாடகையை கட்டி வருகிறோம். அப்போது, எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது திடீரென பாக்கி இருப்பதாக கூறுகின்றனர். காரணம் கேட்டால் கடந்த 2016ல் இருந்து உயர்த்தப்பட்ட வாடகை பணம் என்று கூறுகின்றனர். அதுவும், லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாக கூறுகின்றனர். இதுபோன்று திடீரென பணம் கட்ட சொன்னால் வாடகை தாரர்கள் என்ன செய்ய முடியும். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.