சாலையில் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளருக்கு 10ஆயிரம் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

2018-02-12@ 19:03:51

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, காந்தி பிரதான சாலை, கதிர்வேடு, லட்சுமிபுரம், புத்தாகரம், சூரப்பட்டு, மாதவரம் ஜிஎன்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் நடுவே மாடுகள் சுற்றித் திரிகிறது. திடீரென மாடுகள் ஓடும்போது வாகனங்கள் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச்செல்கின்றவர்கள் படுகாயம் அடைகின்றனர். சில நேரம் உயிரிழப்புகளும் நடந்துள்ளது.எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று மாதவரம் மண்டல சுகாதாரத் துறையினருக்கு பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த டிசம்பர் முதல் இன்றுவரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் 25க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து, பெரம்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் 1500 அபராதத் தொகை மற்றும் தினப்படி 75 மருத்துவ தொகை வழங்கி, அனைத்து மாடுகளையும் மீட்டு சென்றனர். இனிமேல் மாட்டின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’மார்ச் 1ம் தேதி முதல் பிடிபடும் ஒவ்வொரு மாட்டுக்கும் 10 ஆயிரம் அபராதம், தினப்படி 250 மருத்துவ தொகையாக வசூலிக்கப்படும். சாலைகளில் மாடுகள் விடுவதை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். எங்களது ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், அவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!