வாய்ப்புகளை வீணடித்ததால் தோல்வி...

2018-02-12@ 00:12:33

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில் நல்ல வாய்ப்புகளை வீணடித்ததால் தோற்க நேரிட்டது என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளிடையே மொத்தம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளிலும் வென்று முன்னிலை வகித்த நிலையில், 4வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது 100வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். கேப்டன் கோஹ்லி 75 ரன், டோனி 42* ரன் எடுத்தனர்.

இந்திய இன்னிங்சில் 34.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்திருந்தபோது, மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்னை தாண்ட முடியாமல் போனது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 7.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன் எடுத்திருந்த நிலையில் கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில், டி/எல் விதிப்படி தென் ஆப்ரிக்கா 28 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. கை வசம் 9 விக்கெட் இருக்க, ஏற்கனவே எடுத்த 43 ரன்னுடன் மேலும் 159 ரன் தேவை என்ற நிலையில் (20.4 ஓவரில்), தென் ஆப்ரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர்.

அந்த அணி 25.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் மார்க்ராம் 22, அம்லா 33, டுமினி 10, டி வில்லியர்ஸ் 26 (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 39 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஹெய்ன்ரிச் கிளாசன் 43 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), பெலுக்வாயோ 23 ரன் (5 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிளாசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மழை காரணமாக பந்து ஈரமாக இருந்ததால், இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மேலும், டேவிட் மில்லர் 6 ரன் எடுத்திருந்தபோது சாஹல் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் அய்யர் கோட்டை விட்டார். அதே ஓவரில் மில்லர் கிளீன் போல்டான நிலையில், அந்த பந்து ‘நோ பால்’ ஆக அமைய மீண்டும் தப்பினார். இது தென் ஆப்ரிக்க அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘மழைக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டம் ஒரு டி20 போட்டியாகவே அமைந்துவிட்டது. இதனால், இலக்கை துரத்துவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது. அதோடு சில அருமையான வாய்ப்புகளை நாங்கள் வீணடித்துவிட்டோம். அதுவே தோல்விக்கு காரணம்’ என்றார். இந்தியா 3-1 என முன்னிலை வகிக்க, 5வது போட்டி போர்ட் எலிசபத் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நாளை மாலை 4.30க்கு தொடங்குகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!