தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்காத பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானை உடல்நலம் தேறி வருகிறது

2018-02-12@ 11:06:38

பவானி: உடல் நலக்குறைவால் தேக்கம்பட்டியில் நடந்து வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க முடியாத பவானி சங்கமேஸ்வரர் கோயில் பெண் யானை வேதநாயகி, உடல்நலக்குறைவிலிருந்து தேறி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் 10ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக யானைகள் புத்தாக்க முகாமில் பங்கேற்று வந்த ஈரோடு மாவட்டம் பவானி  சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள 45 வயதான பெண் யானை வேதநாயகி, நடப்பாண்டு உடல்நலக்குறைவால் பங்கேற்கவில்லை.

சுமார் 6 மாத காலமாக மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைக்கு, வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உயற்பயிற்சிகள் நிறுத்தப்பட்டதோடு, சீராக்க மருந்து, மாத்திரைகளும் பல்வேறு சத்துகள் நிறைந்த உணவு வகைகளை காலையும், மாலையும் தரப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துள்ள வேதநாயகிக்கு, தேக்கம்பட்டி முகாமிலிருந்து பிற யானைகளுக்கு வழங்கப்படுவது போன்ற விலையுயர்ந்த மருந்துகள், மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படுவதோடு, வேதநாயகிக்கு, தொடர் சிகிச்சையுடன், சிறப்பு பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!