திருமணம் நடந்த 7 நாளில் தாலியை கழற்றி வீசிவிட்டு காதலனுடன் ஓடிய புதுப்பெண்

2018-02-12@ 00:59:15

திருபுவனை: விழுப்புரம் மாவட்டம் பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரமூர்த்தி மகள் புஷ்பலதா(18). இவருக்கும் குன்னம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தஜோதி (23) என்பவருக்கும் கடந்த மாதம் 22ம் தேதி திருமணம் நடந்தது. 28ம்தேதி மாமியார் வீட்டுக்கு கணவருடன் புஷ்பலதா வந்தார். மறுநாள் காலை அரியூருக்கு கணவருடன் காரில் சென்றனர். அப்போது புஷ்பலதா செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசி முடித்ததும், போனில் பேசியவர் யார்? என ஆனந்தஜோதி கேட்டார். அதற்கு நண்பர் என, புஷ்பலதா பதில் அளித்தார். நமக்கு திருமணம் ஆகி விட்டது. இனி நண்பராக இருந்தாலும் பேசக்கூடாது. உனது நண்பரை வரச்சொல். நான் அவரிடம் பேசுகிறேன் என ஆனந்தஜோதி கூறியுள்ளார்.

உடனே புஷ்பலதா போனில் பேசியவரை வில்லியனூர் கடைவீதிக்கு வரச் சொல்லியிருக்கிறார். போனில் பேசியவரும் ஆனந்தஜோதி, புஷ்பலதா இருந்த இடத்துக்கு பைக்கில் வந்தார். அவர் திருவண்டார்கோவிலை சேர்ந்த சாஸ்தா என்பதையும், இவர்கள் 2 பேரும் ஏற்கனவே காதலித்து வந்ததையும் ஆனந்தஜோதி தெரிந்து கொண்டார். அவரிடம், எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனிமேல் எனது மனைவியுடன் போனில் பேசாதே என ஆனந்தஜோதி கூறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த புஷ்பலதா, தான் அணிந்திருந்த தாலி செயினை கழற்றி ஆனந்த ஜோதியின் முகத்தில் வீசிவிட்டு காதலன் சாஸ்தாவுடன் பைக்கில் ஏறி சென்று விட்டார். மறுநாள் 29ம் தேதி அரியலூர் மாவட்டம் தொழுதூரில் சாலையோரம் நின்ற காரில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆனந்தஜோதி கிடந்தார்.  போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தஜோதி நேற்று மயக்கம் தெளிந்தார். இதற்கிடையில் புஷ்பலதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசாரிடம் ஆனந்தஜோதி அளித்த வாக்குமூலத்தில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!