பாஸ்டன்: அமெரிக்காவில் போர்ட்லேண்ட் நகரம் அருகே உள்ள மைனே என்ற இடத்தில் ‘ஓகுரஸ்ட் பால் பண்ணை’ உள்ளது. இந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் வேலை (ஓவர் டைம்) செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றபடி இந்த நிறுவனத்தின் தொழிலாளர் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில், எந்த பிரிவு ஊழியர்களுக்கு ஓவர் டைம் வேலை பொருந்தாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘விவசாய உற்பத்தி பொருட்கள், கறி மற்றும் மீன் பொருட்கள், மற்றும் அழுகும் வகை உணவுகள் ஆகிய 3 வகையான உற்பத்தி பொருட்களை டின்களில் அடைப்பது, பதப்படுத்துவது, குளிர்வூட்டுவது, உலர வைப்பது, சந்தைப்படுத்துவது, சேமிப்பது, கப்பலில் ஏற்ற பேக்கிங் செய்வது அல்லது விநியோகிப்பது’ ஆகிய பிரிவுகளில் வேலை செய்பவர்களுக்கு ‘ஓவர் டைம்’ கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள ‘கப்பலில் ஏற்ற பேக்கிங் செய்வது’ என்ற வார்த்தையில் மிகப்பெரிய சட்டச் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் டிரைவர்களாக 127 பேரில் மூன்று பேர், கடந்தாண்டு 2014 ஆண்டு நீதிமன்றத்தில் திடீரென ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நாங்கள் செய்த ‘ஓவர் டைம்’ வேலைக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டனர்.
இவர்களுக்கு ஓவர் டைம் வேலை கிடையாது என நிறுவன தொழிலாளர் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக பால் பண்ணை நிறுவனம் வாதாடியது. ஆனால், டிரைவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சரியான கில்லாடி. மேற்குறிப்பிட்ட வாக்கியத்தில் ‘ஆக்ஸ்போர்டு கமா’ விடுபட்டு இருப்பதால், ‘கப்பலில் ஏற்ற பேக்கிங் செய்வது’ என்பது ஒரே வேலைதான். தனித்தனி வேலையல்ல. எனவே, டிரைவர்களுக்கும் பேக்கிங் வேலைக்கும் சம்பந்தமில்லை. எனவே, அவர்களுக்குரிய ஓவர் டைம் சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார். ‘பேக்கிங் செய்வதும், கப்பலில் ஏற்றுவதும் தனித்தனி வேலைகள். இரண்டுக்கு நடுவே ‘கமா’ விடுபட்டுள்ளது’ என நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் அதை நிராகரித்தனர். டிரைவர்களுக்கு ரூ.64 கோடி இழப்பீடு வழங்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். இப்படியேவிட்டால் எதுவும் மிஞ்சாது என பணிந்த நிறுவனம், டிரைவர்களுடன் பேரம் பேசி ரூ.32 கோடி தருவதாக ஒப்புக் கொண்டது. அதோடு, தனக்கு ரூ.32 கோடி செலவு வைத்த அந்த சட்டத்தை உடனடியாக திருத்தி, ‘கமா’ இருந்தால் தானே தொல்லை என எல்லா இடத்திலும் ‘;’ என்ற குறியீடு உள்ள ‘செமிகோலன்’ போட்டு, சட்டத்தை ஸ்ட்ராங்காக்கி விட்டது. ‘சட்டத்தில் உள்ள ஓட்டை பயன்படுத்தி’ என்பார்களே... அது, இதுதான் போலும்...!
நிறுவனம் சிக்கியது எப்படி?
‘ஆக்ஸ்போர்டு கமா’ (,) என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளை குறிப்பிடும்போது அவற்றை பிரித்து காட்டுவதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும். உதாரணத்துக்கு, ‘அ, ஆ, மற்றும் இ’ என்று இந்த ‘கமா’வை பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இவை மூன்றும் தனித்தனி வார்த்தைகளாக பொருள்படும். அப்படி இல்லாமல், 2வது வார்த்தைக்குப் பிறகு ‘கமா’ போடாமல், ‘ஆ மற்றும் இ’ என்று குறிப்பிட்டால் ஒரே வார்த்தையாகி விடும். இதுதான், ‘ஆக்ஸ்போர்டு கமா’வின் சூட்சமம்.இந்த வழக்கில் டிரைவர்கள் சுட்டிக்காட்டிய சட்ட விதிமுறையில், ‘பேக்கிங், ஷிப்மென்ட், ஆர் டிஸ்டிரிபியூஷன்’ (பேக்கிங் செய்வது, கப்பலில் ஏற்றுவது அல்லது விநியோகம்) என்று குறிப்பிட வேண்டியதை, ‘பேக்கிங் பார் ஷிப்மென்ட் ஆர் ஸ்டிரிபியூஷன்’ என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, ‘பேக்கிங் பார் ஷிப்மென்ட்’ என்பது தனித்தனியாக வேலையாக இல்லாமல், அது ஒரே வேலை என்ற அர்த்தத்தை அளித்துள்ளது. அதாவது, ‘கப்பலில் ஏற்ற பேக்கிங் செய்ய வேண்டும்’ என பொருள் தருகிறது. இதில்தான் பால் பண்ணை நிறுவனம் வசமாக சிக்கி விட்டது. டிரைவர்களின் வழக்கறிஞர் வாதம் செய்தபோது இதை, ‘ஷிப்’புக்குப் (கப்பல்) பிறகு ‘கமா’ கடலில் மூழ்கி விட்டது’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.