புதுடெல்லி: பழைய ரூ.1000, ரூ.500 தடை விதிக்கப்பட்டு 15 மாதங்கள் முடிந்த நிலையிலும், திரும்பப் பெறப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பதில் இப்போதும் குழப்பம் நிலவுகிறது. இந்த நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 2016, நவம்பர் 8ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.15.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியது. இதில், ரூ.1000 நோட்டுகளின் எண்ணிக்கை 685.8 கோடி. இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 800 கோடி. அதேபோல், புழக்கத்தில் இருந்த ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 1,716.5 கோடி. இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்து 250 கோடி. இவற்றில் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மேலும், வங்கிக்கு இன்னும் ரூ.16 ஆயிரத்து 50 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே திரும்பி வரவில்லை என்றும் கூறியது.
இந்நிலையில், வங்கிகளுக்கு திரும்பி வந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் துல்லியமான எண்ணிக்கையை தெரிவிக்கும்படி செய்தி நிறுவனத்தை சேர்ந்த நிருபர் ஒருவர் சமீபத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிடம் தகவல் கேட்டார். அதற்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள பதிலில், ‘வங்கிகளிடம் திருப்பி கொடுக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய, அவற்றை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 59 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும், துல்லியமான எண்ணிக்கை தெரிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது