‘பிப்ரவரி 14’ ‘விழியில் விழுந்து... இதயம் நுழைந்து.... உயிரில் கலக்கும் காதலை, மகிழ்வுடன் இதயங்கள் பரிமாறிக் கொள்ளும் காதலர் தினம் என்னும் பெருநாள்’’. இந்த நாளில் எல்லா நாடுகளிலும் காதல் வாசம் பரப்பி, பூமிப்பந்து முழுவதும் காதல் விதைக்கும் பெருமைக்குரியவை ஓசூர் ரோஜாக்கள். கடல் மட்டத்தில் இருந்து 850 மீட்டர் உயரத்தில் மண்வளமும், மலைவளமும், தொழில் வளமும் கொழிக்கும் அற்புத நகரம் ஓசூர். இங்கு மட்டுமின்றி பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி, அகலக்கோட்டை பகுதிகளிலும் பசுமைக்குடில்கள் அமைத்தும், திறந்த வெளிகளிலும் ரோஜா தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
பல ஆயிரம் ஏக்கரில் நொப்ளஸ் என்னும் பிங்க், கிராண்டுகாலா, தாஜ்மகால் என்னும் சிவப்பு, ஸ்பிரே, தாரா, பஸ்ட் ரெட் என்னும் வெளிர்சிவப்பு, எல்லோ, பேஷிநேசன், சேடோ, தாளியா, ஓசன்பேன்ட், நோவியா என்னும் மஞ்சள், அவிலான்ச் என்னும் வெண்ணிறம் என்று 150க்கும் மேற்பட்ட ரகங்களில் மலர்ந்து மணம் பரப்புகிறது. காதலை சொல்ல சிவப்பு, சமாதானத்திற்கு வெள்ளை, நட்பை மேம்படுத்த மஞ்சள், உறவுகளை மகிழ்விக்க பிங்க் என்று, ரோஜாக்களின் ஒவ்வொரு வண்ணமும், மனிதகுலத்தின் எண்ணங்களை பிரதிபலிப்பவை.
இது குறித்து சிறுகுறு ரோஜா விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத், ‘‘காதலர் தினம் கொண்டாட அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ரகம் தாஜ்மகால் என்னும் சிவப்பு ரோஜாக்கள்தான். அதன் வளர்ச்சியும், கம்பீரமான காம்புகளும் அயல்நாட்டு ரோஜாக்களில் காணமுடியாத தனிச்சிறப்பு. இதர ரோஜாக்களை போல் அல்லாமல் இதிலிருந்து வெளிப்படும் வாசமும் வித்தியாசமானது. இதை அனுபவித்து லயிப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரானந்தம். அதன் காரணமாகவே உலக காதல் சின்னமான தாஜ்மஹாலின் பெயரை இந்த ரோஜாவுக்கு சூட்டியுள்ளனர்’’ என்றார்.
ஜி.காந்தி,