பிப்.19ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் வருகை பாகுபலி உற்சவத்தில் பங்கேற்கிறார்: பிப்.27ம் தேதி விவசாய மாநாட்டில் கலந்து கொள்கிறார்

2018-02-12@ 00:03:03

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், இம்மாதம் 19ம் தேதி மைசூரு மற்றும் சரவணபெலகோளா மற்றும் 27ம் தேதி தாவணகெரேவில் நடக்க உள்ள மாநில அளவிலான விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
 கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் பாஜ, மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவுக்கு 3 முறை வந்திருந்து பிரசாரம் செய்துவிட்டு டெல்லி சென்றார். இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி அக்கட்சியின் சார்பில் பல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற பரிவர்த்தனா பேரணி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தற்போது மீண்டும் அவர் கர்நாடகாவுக்கு வர உள்ளார். அரசு முறை பயணமாக அவர் வந்தாலும், தேர்தலை குறிவைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சித்தராமையா தலைமையிலான அரசையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி வரும் 19ம் தேதி மைசூருவில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். அதே நாளில் ஹாசன் மாவட்டம், சரவணபெலகோளாவில் நடைபெற்றுவரும் பாகுபலி மகா உற்சவத்தில் பங்ேகற்கிறார். பிப்ரவரி 27ம் தேதி பாஜ மாநில தலைவர் எடியூரப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு தாவணகெரேவில் அக்கட்சியினர் மாநில அளவிலான விவசாய மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள விவசாயிகளுக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான விளக்க உரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து அன்று பகல் மூன்று மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளுடன் கலந்துரை ஆற்றுகிறார். அப்போது, அவர்களின் சந்தேகங்களை பிரதமர் கேட்டறிகிறார்.

பயணத்தில் மாற்றம்
பாஜ தேசிய தலைவர் அமித்ஷா வரும் 18ம் தேதி கர்நாடகா  வர இருப்பதாவும், அப்போது பாஜ சார்பில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தில் மாற்றம் செய்திருப்பதாக டெல்லி பாஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 18ம் தேதி இரவு டெல்லியிலிருந்து மங்களூருவுக்கு வரும் அமித்ஷா குக்கே சுப்ரமணியா கோவிலில் தங்குகிறார். பின்னர், 19ம் தேதி காலை சாமி தரிசனம் செய்கிறார். இதன் பின்னர், மைசூருவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அமித்ஷாவும் பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!