பெங்களூரு: ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் எடியூரப்பாவை விமர்சனம் செய்வதில் நேரத்தை வீணடிக்கிறது என்று பாஜ செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; முதல்வர் சித்தராமையா எப்போது பார்த்தாலும் பாஜ மாநில தலைவர் எடியூரப்பாவை குவாரி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறைக்கு சென்றவர் என விமர்சனம் செய்து வருகிறார். அரசு விழாவாகட்டும், காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியாகட்டும் அதில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் பற்றியோ அல்லது அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை பற்றியோ கூறுவதில்லை. மாறாக எப்போது பார்த்தாலும் எடியூரப்பாவை பற்றியே விமர்சனம் செய்து வருகிறார் சித்தராமையா. அவரின் இந்த நடவடிக்கை மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யாததையே காட்டுகிறது.
முதல்வர் சித்தராமையா எடியூரப்பாவை சிறைக்கு சென்றவர் எனக்கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஊழல் வழக்கில் யாரும் சிறைக்கு செல்லவில்லையா?. அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து சேர்்த்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் மீட்ட விவகாரம் முதல்வருக்கு தெரியவில்லையா? மேலும் ஒரு அமைச்சர் போலீஸ் அதிகாரி எம்.கே. கணபதி தற்ெகாலை விவகாரத்தில் கைது செய்யப்படுவோம் என்ற பீதியில் முன் ஜாமீன் பெறவில்லையா?. முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பாஜ பதிலடி கொடுக்காது. மக்கள் வளர்ச்சி பணிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்துவதை விட்டு எடியூரப்பாவை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்கின்றனர் என்றார்.