காதல்! இந்த வார்த்தைக்கு வசப்படாத எந்த உயிரும் பூமியில் இல்லை. இறைவன் மீது காதல் கொள்வது, அரசன் மீது காதல் கொள்வது, தலைவன் மீது காதல் கொள்வது, என்று காதலின் பரிமாணங்கள் பல. கடவுள்கள் கூட காதலுக்கு தப்பவில்லை. யாராக இருந்தாலும் அன்புதான் அதன் உயிர் நாதம். ஒரு தலையாக காதலிப்பது, தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொள்வது, இரண்டும் இல்லாமல் ஜாலியாகவே பொழுதை போக்கிவிட்டு அவரவர் பாதையில் சென்றுவிடுவது அல்லது காதலிக்காக பெண்ணை வெட்டிக் கொலை செய்வது எல்லாம் இந்த காலத்தின் ஸ்டைல்.
பொதுவாக திரைப்படங்களில் காதல் என்பது ஈவ் டீசிங்கில் தான் முதலில் தொடங்குகிறது. கும்பலாக பசங்க இருந்தா அங்கே அரட்டைதான். அப்போது ஒரு பெண் அந்த வழியாக போனால், அந்த பெண்ணைப் பார்த்ததும் அவர்கள் கிண்டல், கேலிப் பேச்சுகள் இருக்கும். சில நேரம் அந்த இடத்தோடு அது முடிந்துவிடும். கேலி பேசியவர்களை கண்டு கொள்ளாத பெண்ணை திரும்ப திரும்ப கிண்டல் செய்து, ஒன்றுமே எதிர்ப்பு இல்லை என்றால், அந்த பெண் தன்னை விரும்புவதாக நினைத்து அவள் பின்னால் சுற்றுவது. இந்த பையன் நம்ம பின்னாலேயே சுத்திசுத்தி வாரானே, என்ற பரிதாபத்தில் அவன் மீது காதல் கொள்வதும் உண்டு. சில நேரங்களில் பெண்களும் பசங்களை கலாய்ப்பது, கேலி, கிண்டல் செய்வது என்று பலரகங்களில் திரும்புவதும் உண்டு.
காதலில் இது போன்ற உத்திகள் எல்லா காலத்திலும் இருந்துள்ளது. இப்போது பீச் பார்க், சினிமா தியேட்டர், மால்கள் ஆகியவை காதலர்களின் புகலிடங்கள். ஆனால் சங்ககாலத்தில் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அருவிகள், ஆற்றங்கரை, குளக்கரை, பசுமையான சோலைகள், விழாக்கள், தினைப்புனம் காதல் ஆகியவைதான். எந்த இடத்தில் அரங்கேறினாலும் காதல் வலிவானது. அதிலே, கண்டதும் காதல் என்பது எவ்வளவு ஆழமானது… அதை நினைத்தாலே சிலிர்க்கிறது. இதை அம்பிகாபதியின் அப்பா கம்பர் ராமாயணத்தில் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருப்பார். அதாவது, மிதிலை நகரின் தெருவில் விஸ்வாமித்திரர், தனது தம்பி லட்சுமணனுடன் ராமன் நடந்து வருகிறான். அப்போது மாளிகையின் மேல் இருந்து சீதை, ராமனை பார்க்கிறாள்.
‘‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’’ என்று தான் இந்த இடத்தில் நமக்கு நினைவு வரும். ஆனால் இதை முழுமையாக பார்த்தால்..
‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும்’ என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது;
குன்றும் சுவரும் திண் கல்லும்,
புல்லும் கண்டு உருக, பெண் கனி நின்றாள்’’
என்று கம்பர் கூறுகிறார். கல்லும்,மண்ணும் கரைந்து போக வைக்கும் அழகை ராமன் எப்படிப் பார்த்தான்,
‘‘கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்’’
இதை வள்ளுவர் ‘கண்ணுதலான் காதல்’ என்கிறார். அதாவது பார்ப்பவர் பார்த்தால் தான் காதல் வரும் என்ற பழமொழியை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். கண்ணதாசனோ, ‘‘கவிஞன் கண்டாலே கவிதை, காண்பவர் கண்டாலே காதல், அழகினைப் புரியாத பாவம், அருகினில் இருந்தென்ன லாபம்’’ என்கிறார்.
அதனால் தான் காதலின் வலிவை கூறும் இடத்தில்,
‘‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் ,
மண்ணில் குமரருக்கு மா மலையும் ஓர் கடுகாம்’’ என்கிறார் பாரதிதாசன்.
காதலனை தன் நெஞ்சிலே வைத்திருக்கும் காதலி சூடாக எதையும் சாப்பிடுவதில்லையாம்.
இதை வள்ளுவர் ‘‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக் கறிந்து’’ என்கிறார்.
காதலில் கட்டுண்ட பிறகு பெண்கள், ஆண்களை ரசிப்பதும், ஆண்கள் பெண்களை ரசிப்பதும் இயற்கைதான். அதை ராமன், சீதையின் மூலம் கம்பர் அழகாக வெளிப்படுத்துவார்.
காட்டுக்கு சென்ற ராமனும் சீதையும் கோதாவரி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்துக் கொண்டு அவர்களின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மறந்து ேலசாக சிரித்துக் கொள்கின்றனர்,
‘ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்,
சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும்,
போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் செய்தாள்’’,
அதாவது, அன்னப் பறவையின் நடையைக் கண்ட ராமன் சீதையின் நடையோடு ஒப்பிட்டுப் பார்த்து சிரிக்கிறான். அங்கே கம்பீரமாக நடந்து வந்து ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்ப நடந்து போகும் ஆண் யானையின் நடையை ராமனின் நடையோடு ஒப்பிட்டுத் பார்த்து சீதை மகிழ்கிறாள்.
காதல் என்று வந்துவிட்டால் உயிரையும் கொடுக்கும் தன்மை வந்துவிடும். அடுத்த பிறவியிலும் இது தொடரும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட காதல் கை கூடவில்லை என்றால்...
‘காதல், காதல், காதல்; காதல் போயின், காதல் போயின், சாதல் சாதல், சாதல்’ என்றான் பாரதி.
‘‘உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்,
இல்லாயின் இல்லாயின் வான் செல்லுவோம்’’ -என்கிறார் கவியரசர்.
காதலுக்குத் தான் என்ன வலிமை..
கோவலூர் புகழேந்தி