சிங்கம்புணரி: பெரியாறு நீட்டிப்பு கால்வாயைச் சீரமைக்க ரூ.10 கோடியில் முறையாகப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளாததால் பணம் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப்போனது என விவசாயிகள் வேதனையுடன் குற்றம்சாட்டி உள்ளனர். சிங்கம்புணரி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு நீடிப்புக் கால்வாய் மதுரை மாவட்டம் புலிப்பட்டியிலிருந்து கொண்டுவரப்பட்டது. இதில் சிங்கம்புணரியில் எண் 5, 6, 7 ஆகிய பிரிவு கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன.
இதில் 5வது பிரிவு கால்வாய் சுக்காம்பட்டியிலிருந்து கொங்கம்பட்டி வரை 14 கிமீ தூரமும் 6ம் கால்வாய் அம்பேத்கர் நகரிலிருந்து ஏரிக் கண்மாய் வரை 18 கிமீ தூரமும், 7ம் கால்வாய் எஸ்.எஸ்.கோட்டை வரை 13 கிமீ தூரத்துக்கும் அமைக்கப்பட்டிருந்தது.இதில் வரும் தண்ணீர் மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு கண்மாய்கள் பயனடைந்து விவசாயம் செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால் பெரியாறு நீடிப்பு கால்வாயின் இருபுறமும் உள்ள சிமென்ட் சிலாப்புகள் சிதிலமடைந்தும், சீமைக் கருவேல மரங்களால் மூடப்பட்டன. இதனால் 201617ம் ஆண்டு சுமார் 10 கோடி மதிப்பில் இந்த 5,6,7, ஆகிய கால்வாய்யைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது. தரமற்ற பணிகளால் கால்வாய் சீரமைக்கப்பட்டு ஓராண்டு முடிவதற்குள் பல இடங்களில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து தென்சிங்கம்புணரி மானாவாரி குழுத் தலைவர் முத்துராமன் கூறுகையில்”பாலாற்று தண்ணீர் மற்றும் பெரியாறு நீடிப்புக் கால்வாய் மூலம் இப்பகுதியில், கடலை, நெல் மற்றும் தோட்டப் பயிர்கள் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது மழையில்லாமல் ஆற்றுப் பாசனம் மற்றும் பெரியாறு நீடிப்புக் கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பெரியாறு நீடிப்புக் கால்வாயில் தண்ணீர் இருந்தும் இப்பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்பு கால்வாய் சேதத்தைக் காரணம் காட்டி தண்ணீர் விடுவதில்லை. பின்னர் ரூ.10 கோடியில் சீரமைத்தும் தரமற்ற பணியால் தண்ணீர் வருவதற்குள் கால்வாய்கள் சேதடைந்து தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.