ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீடு வரவுள்ளது

2018-02-12@ 00:11:59

சென்னை: மகளிர் நலத்திட்டங்களை பாகிஸ்தானுக்கே கற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா என அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரே போடாக போட்டார். மேலும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீடும் இனிமேல்தான் வரவுள்ளது என்று கூறிய செய்தியும் நிருபர்களுக்கே தலை சுற்றலை ஏற்படுத்தியது.  தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ பெங்களூருவில் இருந்து நேற்று பகல் 1.30 மணிக்கு விமானம்   மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுவது மிக பொருத்தமான ஒன்று. அவர் சேலை கட்டிய பெண்ணாக இருந்தாலும், வேட்டி கட்டிய ஆண்கள் அனைவருக்கும் சவால் விடும் விதத்தில் செயல்பட்டார். பெண்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஜெயலலிதா மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். பெண்கள் பிரச்னையை தீர்ப்பதற்காக முதன் முதலில் மகளிர் காவல் நிலையத்தை ஏற்படுத்தியது ஜெயலலிதா தான்.

அதன் பின்பு தான் பாகிஸ்தானில் கூட மகளிருக்கு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என்று கூறுவதற்கு விஜயகாந்துக்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் ஒரு சட்டசபை தொகுதியில் கூட வெற்றிபெற முடியாதவர். அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி. அவருடைய படத்தை சட்டசபையில் திறப்பது சரியானது அல்ல என்று கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை இனிமேல் தான் வரவுள்ளது என்று கூறியதும் நிருபர்கள் குழம்பினர்.  

இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க மானியம் வழங்குவது சம்பந்தமாக நீங்கள் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதைப்பற்றி எல்லாம் இப்போது கேட்காதீர்கள்.  அது பற்றி சொல்வதற்கு இப்போது நேரமில்லை என்று கூறி விட்டு வேகமாகப் புறப்பட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!