புதுடில்லி : இந்தாண்டில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்கள், அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் ஆகியவற்றை கருதி, சமூக வலைதளங்களில், சிறப்பான முறையில் பிரசாரம் செய்ய, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடிமட்ட தொண்டர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுடன், சமூக வலைதளங்கள் மூலம், தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்படி, தங்கள் கட்சி, எம்.பி.,க்களுக்கு, பா.ஜ., தலைமை உத்தரவிட்டு உள்ளது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2014ல், அரசு அமைந்தது. 2019ல், அடுத்த பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தவிர, இந்தாண்டு, கர்நாடகா, மேகாலயா, திரிபுரா உட்பட எட்டு மாநிலங்களுக்கு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதையடுத்து, இளம் வாக்காளர்களை கவரும் வகையிலும், பா.ஜ., அடிமட்ட தொண்டர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களை பயன்படுத்த,
பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதென, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும், பிரதமர், மோடியும் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, தலா, மூன்று, எம்.பி.,க்களுக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் பணியமர்த்தப்படுகிறார். சமூக வலைதளங்கள், 2000க்கு பின் பிறந்தவர்கள் மத்தியில், பிரபலமாக உள்ளது. இளம் வாக்காளர்களுடன், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தால், தேர்தலில், அவர்களின் ஓட்டுகளை எளிதில் பெற்று விட முடியும் என, பா.ஜ., தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இளைஞர்களிடம், சமூக வலைதளங்களின் தாக்கம் பற்றி,பா.ஜ., - எம்.பி.,க்களிடம், மோடியும், அமித் ஷாவும் வலியுறுத்தி வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தோல்வி தந்த பாடம்
பா.ஜ., ஆளும், ராஜஸ்தானில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், அனைத்து இடங்களிலும், காங்.,கிடம், பா.ஜ., தோல்வி அடைந்தது. மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலிலும், திரிணமுல் காங்.,கிடம், பா.ஜ., தோல்வியை தழுவியது. இதையடுத்து, புதிய வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களை கவர்ந்திழுக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, 2017 டிசம்பரில், 'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய மோடி, '2000ல் பிறந்த அனைவரும், 2018ல், 18 வயதை பூர்த்தி செய்வர். வருங்கால இந்தியாவில், மாற்றங்கள் நிகழ்வதை, இளைஞர்களே முடிவு செய்வர்.
எனவே, 18 வயது நிரம்பியோர், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து, ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி, பிறருக்கு முன்னோடியாக திகழ்கிறார். 'நமோ ஆப்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட, 'ஆப்' மூலம், பா.ஜ.,வைச் சேர்ந்த அனைத்து, எம்.பி.,க்களுடனும், மோடி தொடர்பில் உள்ளார். இந்த மொபைல் ஆப் மூலம், அரசின் செயல்பாடு, திட்டங்கள் குறித்த தகவல்கள், எம்.பி.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்ற, பா.ஜ., 282 இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற, முதன்முறை ஓட்டளித்த இளம் வாக்காளர்களே காரணம் என, கூறப்படுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், முதன்முறையாக ஓட்டளிக்க உள்ள, இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை, தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், வரும் தேர்தலில், இளம் வாக்காளர்களின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply