கட்டண உயர்வால் மனக்குமுறலுடன் மாநகர பஸ்களில் செல்லும் பயணிகள்.. : மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்

2018-02-12@ 00:29:32

சென்னை: சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வேலைக்கு செல்லும் ஆண், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அரசு பஸ்களையே நம்பியே உள்ளனர். காரணம் அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பது தான். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்களில் அதிகபட்சம் ரூ.500க்குள் சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. வண்ண, வண்ண அலங்காரங்களுடனும், ஒளிரும் விளக்குகளுடனும் பல தனியார் பஸ்கள் வலம் வந்தாலும் அதில் பல மடங்கு கட்டணம் அதிகம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் பார்வை அரசு பஸ்களை நோக்கியே இருக்கும். இந்த நிலையில் பயணிகளின் தலையில் பேரிடி விழுந்தாற் போன்று அரசு கடந்த 18ம் தேதி திடீரென பஸ் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. இதனால் வெளியூர் பஸ்களில் ரூ.300 முதல் 400 வரை கட்டணம் அதிகரித்தது. இதை கேள்விப்பட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தியும் அரசு இதுவரை பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை.

சென்னை போன்ற மாநரகங்களில் இரு மடங்கு கட்டணம் உயர்வால் அன்றாடம் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தும் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.  கட்டண உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதம் நெருங்கியும் பயணிகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை. தினமும் வாங்கும் கூலியில் பாதி பஸ் கட்டணத்துக்கே சென்றுவிடுவதாகவும், இரவு சாப்பாட்டுக்கு கூட தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பஸ் நிலையம், டீக்கடை, பஜார், மார்க்கெட், முட்டுச் சந்து என எங்கு பார்த்தாலும் பஸ் கட்டண உயர்வால் தாங்கள் படும் அவஸ்தை மற்றும் பஸ் கட்டணம் அதிகரிப்பால் பணம் பற்றாக்குறையால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசே காரணம் என்று திட்டி தீர்ப்பதை கேட்க முடிகிறது. குறிப்பாக பஸ்சில் பயணிக்கும் பொதுமக்கள், ‘இருக்கிற விலைவாசியில இந்த எழவெடுத்த அரசாங்கம் பஸ் கட்டணத்தை கூட்டிட்டாங்க. 13 ரூபாய் கொடுத்த இடத்துல இப்படி அநியாயமா 34 ரூபாய் வாங்குறாங்க. மக்களை கஷ்டப்படுத்துறதுக்கு தான் இவங்க ஆட்சி நடத்துறாங்களா, சும்மா, சும்மா நஷ்டம், நஷ்டம்ன்னு சொல்றாங்களே, இந்த அமைச்சருங்க, எம்எல்ஏங்களுக்கெல்லாம் புசுக்குன்னு பல ஆயிரம் சம்பளத்தை உயர்த்தினாங்களே அப்பெல்லாம் நஷ்டம் கண்ணுக்கு தெரியலயா, எது எதுக்கெல்லாம் செலவு செய்றாங்க, இந்த நஷ்டத்தை சரிசெய்ய பணம் கொடுத்தாத்தா என்னவாம். நாம்ம இங்க 10 காசு சம்பாதிக்க நாயா அலையுறோம், ஆனா அவங்க(அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்) உக்காந்த இடத்துல பல கோடி சம்பாதிக்குறாங்க, அப்புறம் எப்படி நம்மளோட கஷ்டம் அவங்களுக்கு தெரியும்’ என்று புலம்பி தள்ளுகின்றனர்.

பல பஸ்களில் பயணிகள் ஆத்திரம் தாங்காமல் கண்டக்டர்களுடன் சண்டையிடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. கட்டணம் உயர்த்திய பின்பும் ஓட்டை, உடைசலுடன் உள்ள பஸ்களை இயக்குவது பொதுமக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. பிற மாநிலங்களுடன் கட்டணத்தை ஒப்பிடும் அரசு, அந்த மாநிலங்களில் தரமான பஸ்கள் இயக்குவதை ஏன் ஓப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்று பொதுமக்கள் மத்தியில் பஸ் கட்டண உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!