காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஐந்து வீரர்கள் வீரமரணம்; 30 மணிநேர சண்டை முடிவுக்கு வந்தது

2018-02-12@ 00:03:04

சஞ்சவான்: காஷ்மீரில் சஞ்சவான் ராணுவ முகாமில் 30 மணி நேரம் நடந்த தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதி
கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 5 வீரர் கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் சஞ்சவான் ராணுவ முகாமின் குடியிருப்புப் பகுதி வழியாக நேற்று முன்தினம் நுழைந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முகாமை சுற்றி பல்வேறு இடங்களில் பதுங்கி தாக்குதல் நடத்தினர். இவர்களில் 2 பேரை பாதுகாப்பு படையினர்் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர். இரவு முழுவதும் சண்டை தொடர்ந்தது. நேற்று முன்தினம் தீவிரவாதிகளால்  2 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், நேற்று காலை மேலும் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

வீரர் ஒருவரின் தந்தையும் குண்டு பாய்ந்து இறந்தார். இதனால், தீவிரவாதிகளின் தாக்குதலில் இதுவரை பலியான வீரர்கள் எண்ணிக்கை 5 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், 6 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தலையில் காயமடைந்துள்ள சிறுவன் ஒருவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.  ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் நேற்று மேலும் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இதன் மூலம், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் ராணுவ முகாம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் அங்கு வேறு தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 30 மணி நேர தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்தது. எனினும், ராணுவ முகாம் உள்ள பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கி உள்ளார்களாக என தேடுதல் பணி நடந்து வருகிறது.

பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் நசீர் அகமதுவும், அவருடைய  நிறைமாத கர்ப்பிணியான மனைவியும் காயமடைந்தனர்.  சத்வாரியில் உள்ள ராணுவ  மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த  நசீரின் மனைவிக்கு இரவு முழுவதும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த  நிலையில், நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும்  நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரிவினைவாதிகள் பந்த்
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் மக்பூல் பட் கடந்த 1984 பிப். 11ல் தூக்கிலிடப்பட்டார். இந்த தினத்தையொட்டி காஷ்மீரில் உள்ள குப்வாரா மற்றும் நகரில் பிரிவினைவாதிகள் நேற்று பந்த் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பந்த் காரணமாக, இப்பகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!