மாஸ்கோ: ரஷ்யாவில் 71 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இதில், பயணம் செய்த அனைவரும் பலியாயினர். ரஷ்யாவை சேர்ந்த ‘சரதோவ் ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனம், உள்நாட்டு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ‘ஆன்டனோவ் ஏன்-148’ ரக விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மாஸ்கோவின் டோமோடிடோவா விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு நேற்று புறப்பட்டது. ஆனால், அடுத்த 2 நிமிடங்களில் அந்த விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. அதன் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. உடனே, விமானத்தை தேடும் பணி தொடங்கியது.
மாஸ்கோவுக்கு வெளியே ராமன்ஸ்கை மாவட்டத்தின் பனிவயல் பகுதியில் அந்த விமானம் கீழே விழுந்து எரிந்து கொண்டிருந்தது, வானில் இருந்தே தீப்பற்றிய நிலையில் விமானம் கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடக்கின்றன.
அங்கு ரஷ்ய மீட்பு படை விரைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத இடத்தில் விமானம் விழுந்து கிடப்பதால், மீட்பு குழுவினர் நடந்தே சென்றனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ரஷ்ய தயாரிப்பு விமானம் 7 ஆண்டுகள் பழமையானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்கு மோசமான வானிலை அல்லது மனித தவறு உட்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்து குறித்த விசாரணையை ரஷ்ய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முழு விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும். விபத்து நடந்த இடத்துக்கு ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சர் விரைந்துள்ளார்.