9,351 பதவிக்கான குரூப் 4 தேர்வு : தமிழகம் முழுவதும் 17.53 லட்சம் பேர் எழுதினர்

2018-02-12@ 00:14:09

சென்னை: குரூப் 4 பதவியில் 9,351 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 187 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்வில் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-494 இடம், இளநிலை உதவியாளர் (பிணையற்றது)- 4096, இளநிலை உதவியாளர் (பிணையம்)-205, வரித்தண்டலர்(கிரேடு 1)-48. நில அளவர்-74, வரைவாளர்-156, தட்டச்சர்- 3463, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-815 என மொத்தம் 9,351 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது.

இத்தேர்வை எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 1,60,120 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குரூப் 4 பதவிக்கான எழுத்து ேதர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 508 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர்,வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும். எந்தவித நேர்முக தேர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் தான் போட்டியிடுவார்கள். ஆனால், இந்த தேர்வில் 1 பதவிக்கு 187 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், கடும் போட்டி நிலவியுள்ளது.

புதிய முறை அமல்: முதல் முறையாக இந்த தேர்வில் தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்ட தனித்துவ விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வினாத்தாள் எண்ணை மட்டுமே எழுத வேண்டியது இருந்தது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்காக தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 5 நிமிட கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. சுமார் 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெற்றது.

3.16 லட்சம் பேர் ஆப்சென்ட்:  குரூப் 4 தேர்வை சுமார் 84.71 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். 15.29 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 3 லட்சத்து 16 ஆயிரத்து 392 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

பொதுத்தமிழ் எளிது; பொது அறிவு கடினம்

தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், “ தேர்வில் பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகள் அதிக அளவில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை நடப்பு நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே கேட்கப்பட்டிருந்தது. அதாவது, புது டெல்லியில் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு என்ன?, 2017ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “துக்கம் சுக்கம்” என்ற நாவலின் ஆசிரியர் யார்? என்று பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மேலும் பொது தமிழ் தேர்வில் “மன்னிப்பு” எம்மொழிச் சொல்? என்று கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் பொதுத்தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. பொது அறிவு சற்று கடினமாக இருந்தது” என்றனர்.

சென்னையில்  1.25 லட்சம் பேர் பங்கேற்பு:

சென்னையை பொறுத்தவரை குரூப் 4 தேர்வை எழுத 1,60,120 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 78 சதவீதம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். அதாவது, 1,24,894 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 35,226 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!