சென்னை : முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் உருவப்படம், தமிழக சட்டசபையில், நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி,பிரதமர் மோடியைசந்திக்க டில்லி சென்ற போது, சட்டசபையில், ஜெ., உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்தார்.
பச்சை நிற உடை
ஆனால், அரசியல் சூழல் காரணமாக, இந்த கோரிக்கையை, மோடி ஏற்கவில்லை. இந்நிலையில், ஜெ., உருவப்படத்தை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபையில் திறந்து வைக்க, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.
அதன்படி, சட்டசபையில் நேற்று காலை, 9:30 மணிக்கு விழா துவங்கியது. இதற்காக, சபாநாயகர் இருக்கை அகற்றப்பட்டு, அங்கு, நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்,பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர், ஜெயராமன் ஆகியோர் பேசினர்.
பின், ஜெ., உருவப்படத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சட்டசபையில், சபாநாயகர் இருக்கைக்கு வலது புறத்தில், உருவப்படம் மாட்டப்பட்டு உள்ளது. பச்சை நிற உடையில் காணப்படும், ஜெ., உருவப்படத்தின் கீழ், 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஜெ., உருவப்படத்தை வரைந்து தந்த, ஓவியக் கல்லுாரி பேராசிரியர், மதியழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன்,நிதித் துறை செயலர், சண்முகம் உள்ளிட்ட மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; தமிழக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மலர் அலங்காரம்
மேலும், அ.தி.மு.க., அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள், ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்; முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வாரிய தலைவர்களும் பங்கேற்றனர்.
ஜெ., உருவப்படம் திறக்க, எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, அரசு செவி சாய்க்காததால், படத்திறப்பு விழாவை, தி.மு.க., - காங்., புறக்கணித்தன.
சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்கவில்லை; கருணாஸ் பங்கேற்றார். ஜெ., உருவப்பட திறப்பையொட்டி, சட்டசபையில், கண்ணை பறிக்கும் விதத்தில், பல்வேறு வண்ணங்களில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் மற்றும் கடற்கரை சாலையில், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
'பிரதமர் ஏன் வரவில்லை'
தமிழக சட்டசபையில், ஜெ., உருவப்படம் நேற்று திறக்கப்பட்டட நிலையில், அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர், உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
குட்காவை சபையில் காண்பிக்கும் போது, சபை மீறல் எனக் கூறி, எங்கள் மீது, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். தற்போது அவரே, ஜெ., உருவப்படத்தை திறந்து, சபையின் மரபை மீறியுள்ளார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், ஜெ., படம் வைப்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அவசர அவசரமாக, சட்டசபையில், ஜெ., உருவப்படம் திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.ஜெ., உருவப்படத் திறப்பு விவகாரத்தில், நாங்கள் அரசியல் செய்யவில்லை; அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவிற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வராதது ஏன் என்பதற்கு, அமைச்சர் ஜெயகுமார் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19+ 132)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply