கர்நாடகாவில் பொதுவாக ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கட்சி தலைமை மீது வெறுப்பு கொள்பவர்கள் கட்சி விட்டு விலகி பிற கட்சியில் சேருவது அல்லது தனியாக புதுக் கட்சி தொடங்குவது வழக்கமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போது புதியதாக தொடங்கப்படும் கட்சிகள் தேர்தல் முடிந்த பின் அடையாளம் தெரியாமல் போய்விடுவது கடந்த கால வரலாறாக உள்ளது. அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்பட பல மூத்த அரசியல் தலைவர்கள், சமூகநல அமைப்பினர் மாநிலத்தில் முழுமையாக வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டுமானால் தேசிய கட்சிகளிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதை தடுத்து பலமான மாநில கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்கிறார்கள். அரசியல்வாதிகளிடம் எதிரொலித்து வந்த இக்கருத்து தற்போது திரையுலக கலைஞர்களிடமும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
பக்கத்து மாநிலங்கள்: தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு முதல் தற்போது வரை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திமுக ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வருகிறது.
அம்மாநிலத்தில் தேசிய கட்சிகள் பட்டியலில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி ஆகியவை திராவிட கட்சிகளி–்ன் தோளில் அமர்ந்து தான் சவாரி செய்யும் நிலை கடந்த 51 ஆண்டுகளாக உள்ளதே தவிர சொந்த காலில் நின்று அதிகாரத்தை பிடிக்கும் வகையில் தேசிய கட்சிகளால் செல்வாக்கு பெற முடியவில்லை. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலும் தெலுங்கு தேசம் கட்சி மிகவும் பலமாகவுள்ளது. கடந்த 1982 ஆண்டு கட்சி தொடங்கிய என்.டி.ராமராவ், கடந்த 1984ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இரண்டாவது முறையாக கடந்த 1994ல் நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினார். ஓராண்டுக்குள் கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக என்.டி.ராமராவுக்கு எதிராக அவரது மருமகன் சந்திரபாபுநாயுடு போர்க்கொடி உயர்த்தி 1995ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 1999ல் நடந்த தேர்தலிலும் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது.
2004ல் நடந்த பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் தோல்வியடைந்தாலும், 2014ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இப்படி கடந்த 34 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் தெலுங்கு தேசம் உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமுள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் அதிக எம்.பிக்கள் வெற்றி பெறுகிறார்கள். மத்தியில் கடந்த 1989 முதல் தற்போது வரை 28 ஆண்டுகளில் கடந்த 1991 முதல் 1996 வரை மட்டும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இடையில் காங்கிரஸ், பாஜ, ஜனதாபரிவாரங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. இதில் தமிழகத்தில் இயங்கி வரும் திராவிட கட்சிகளும், ஆந்திராவில் இயங்கி வரும் தெலுங்குதேச கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொண்டதின் மூலம் பல வளர்ச்சி பணிகளை சத்திமில்லாமல் செய்து வருகிறார்கள். அந்நிலை கர்நாடகாவில் நிலவவில்லை. தேசியகட்சிகளான காங்கிரஸ், பாஜ மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இடையில் ஜனதாபரிவாரங்கள் ஆட்சி அமைத்திருந்தாலும் தலைவர்கள் இடையிலான கருத்து மோதலில் பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கர்நாடக மக்கள் தேசிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மக்கள் அங்கீகரிக்கவில்லை:
கர்நாடக மாநில மக்களின் மனநிலையை பொருத்தவரை தேசிய நீரோட்டத்தில் அதிகம் கவனம் உள்ளது. மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமையை பெற்று தந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அரஸ், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டு அக்கட்சியை விட்டு வெளியேறி புது கட்சி தொடங்கினார். அவரை மக்கள் அங்கீகரிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பா ஒரு கட்டத்தில் கிராந்தி ரங்கா என்றும் பின்னர் கர்நாடக மாநில காங்கிரஸ் எனவும் இரு முறை மாநில கட்சியை தொடங்கினார். தேர்தலில் மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஜனதாபரிவாரங்களின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் முதல்வர் இராமகிருஷ்ணஹெக்டேவும் ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவின் போது நவநிர்மாண வேதிகே என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதற்கும் மக்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கடந்த 2013ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜ தலைமை மீது அதிருப்தி கொண்டு கட்சியை விட்டு விலகி முன்னாள் முதல்வர் எடியூரப்பா ‘கர்நாடக ஜனதா கட்சி’’ என்ற பெயரிலும், முன்னாள் அமைச்சர் பி. ராமுலு ‘’பிஎஸ்ஆர் காங்கிரஸ்’’ என்ற பெயரிலும் மாநில கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டனர். இரு கட்சியையும் மக்கள் ஏற்கவில்லை. அதேபோல் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து சர்வோதய காங்கிரஸ் கட்சியை விவசாய சங்க தலைவர் கே.எஸ்.புட்டணையாவும், கர்நாடக மக்கள் கட்சி என்ற பெயரில் தொழிலதிபர் அசோக்கெனியும் மாநில கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு கையை சுட்டுக்கொண்டனர். இதை பார்க்கும்போது மாநில கட்சிகளுக்கு மக்களின் அங்கீகாரமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
புது கட்சிகள் எடுபடுமா?
கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கட்சிகளை புறக்கணித்து மாநில கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கூறிவருகிறார்கள். அவர்கள் தலைவராகவுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தேசிய கட்சி என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் பார்வையில் அதை மாநில கட்சியாகவே கருதுகிறார்கள். இந்நிலையில் கன்னட திரைப்பட நடிகர் பி.உபேந்திரா கடந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா என்ற பெயரில் புது கட்சியை தொடங்கினார். அவரை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி பாரதிய ஜனசக்தி காங்கிரஸ் என்ற பெயரில் மாஜி பெண் போலீஸ் அதிகாரி அனுபமா ஷெனாய் புதிய மாநில கட்சியை தொடங்கினார்.
புதியதாக தொடங்கியுள்ள இரு கட்சிகளும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. புதியதாக தொடங்கியுள்ள கட்சிகளுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்குமா? மாநில கட்சி ஆட்சியில் தான் மாநிலம் மேம்படும் என்ற வாதத்தை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? அல்லது என்னதான் தொல்லைகள் வந்தாலும் ஆட்டிப் படைக்கும் பேய்களுடன் வாழ்ந்துவிடலாம், புதிய பேய்கள் வேண்டாம் என்ற மனநிலைக்கு செல்வார்களா? என்பதை வரும் தேர்தல் தீர்மானிக்கும்.