மீனாட்சி கோயில் தீ விபத்து எதிரொலி : 36,000 கோயில்களில் கடைகளை காலி செய்ய பிப். 28 வரை கெடு

2018-02-12@ 10:49:18

மதுரை: தமிழகத்தில் உள்ள 36 ஆயிரம் கோயில்களின் வளாகத்தில் உள்ள கடைகளை வரும் 28ம் தேதிக்குள் காலி செய்ய இந்து அறநிலையத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், அழகர்கோயில் கள்ளழகர், பழநி முருகன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உட்பட 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இங்கு பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், மாலை, குங்குமம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய கோயில் வளாகங்களில் கடைகள் உள்ளன. இவற்றை சிலர் பல தலைமுறைகளாக நடத்தி வருகின்றனர்.

கடந்த 2ம் தேதி இரவு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால், 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. தீவிபத்திற்கு கோயிலில் இருந்த கடைகள்தான் காரணம் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, முதல் கட்டமாக வீரவசந்தராயர் மண்டப பகுதியில் இருந்து 22 கடைகள் காலி செய்யப்பட்டன. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் வளாகங்களில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற இந்து அறநிலையத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

 இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மீனாட்சியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பகலில் நடந்திருந்ததால் உயிர் பலி  வாய்ப்பு உள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் கோயில்களின் வளாகங்களில் உள்ள கடைகளை பிப்ரவரி 28ம் தேதிக்குள் அகற்ற அனைத்து கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் இந்து அறநிலைத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோயில் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் வேகப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கடைகளுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதன்பேரில் பல கோயில்களில் கடைகளை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது.

அறநிலையத்துறைக்கு பல லட்சம் நஷ்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைகள் உட்பட 36 ஆயிரம் கோயில்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 500 முதல் 12,500 வரை வாடகை வசூல் செய்து வருகின்றனர். கடைகளை காலி செய்தால் இந்து அறநிலையத்துறைக்கு மாதந்தோறும் பல லட்சம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என கடை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!