பெங்களூரு: பெங்களூருவில் தமிழ் பேனர்களை கிழிப்பது, தமிழில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் கன்னட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கவர்னர் விஆர் வாலாவிடம் பிப்.25ம் தேதி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூருவில் நேற்று அவ்வமைப்பின் தலைவர் ராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் ராஜன் கூறியதாவது: பெங்களூருவில் தொடர்ந்து தமிழர்கள் மீது மொழி வெறி தாக்குதல் நடக்கிறது. தமிழில் பேசினால் கூட சில அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழர் திருநாளை முன்னிட்டு டேனரி ரோட்டில் தமிழில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது. பேனரில் தமிழ் எழுத்துகள் இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக கன்னட அமைப்பினர் தமிழ் பேனர்களை கிழித்துள்ளனர். அத்துடன் அம்பேத்கர் சிலை அருகே தமிழக கட்சிகளின் கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தமிழர் கன்னடர் ஒற்றுமை பேரணியின் போது தமிழில் பிரசாரம் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறுகின்றன. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிப்.25ம் தேதி மாபெரும் ஊர்வலம் நடத்துகிறது. பெங்களூரு அல்சூரு திருவள்ளுவர் சிலையில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கவர்னர் மாளிகையை சென்றடைகிறது. அத்துடன் கவர்னர் விஆர் வாலாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கிறோம். தமிழர்களின் உரிமை ஊர்வலத்தில் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் தமிழர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.