சென்னை: காவிரி நீர் பிரச்னையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என டிடிவி தினகரன் கூறி இருப்பது அரைவேக்காட்டுத்தனமானது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை சேத்துப்பட்டு ஏரியில் தமிழக மீன்வளத் துறை சார்பில் 42 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் படகு குழாம் மற்றும் விளையாட்டு தூண்டில் மீன்பிடிப்பு வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் பொதுமக்களின் வசதிக்காக 7500 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பசுமை பூங்காவில், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. இதுவரை 4.75 லட்சம் பேர் பூங்காவை பார்வையிட்டுள்ளனர். புதிதாக துவங்கப்பட்டிருக்கும் உணவகத்தில் அசைவம் மற்றும் சைவ உணவுகள் கிடைக்கும்.
காவிரி பிரச்னையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்த பேச்சு அரைவேக்காடுத்தனமானது. முதலில் தினகரன் பத்திரிகைகளை படித்து பார்க்க வேண்டும். பிறகுதான் அரசியலில் ஈடுபட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நீர் கிடைக்க போராடி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அவரது வழியில் எங்கள் அரசும் காவிரி நீரை தொடர்ந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் திட்டமிட்டபடி, சட்டசபையில் திறந்து வைப்போம். ஜெயலலிதாவை பொறுத்தவரையில் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதில் வாழ்கிறார். அவரது பட திறப்புக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். சட்டசபை மட்டும் இன்றி ஜெயலலிதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறக்க அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.